Madhya Pradesh: கோதுமை சாக்கா..? சிமெண்டு சாக்கா..? அரசு விநியோகித்த உணவுமூட்டையில் கலப்படம்..!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் அரசு கொள்முதல் செய்த கோதுமையில் மண், கான்கிரீட், தூசி கலந்ததாகக் கூறப்படும் 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் அரசு கொள்முதல் செய்த கோதுமையில் மண், கான்கிரீட் மற்றும் மண் தூசி கலந்ததாகக் கூறப்படும் சைலோ பேக் சேமிப்பு நிறுவனத்தின் கிளை மேலாளர் உட்பட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, சாத்னா மாவட்டம் நாகோடு பகுதியில் உள்ள ஒரு மகளிர் சுய உதவிக்குழு மூலம் அரசு கொள்முதல் செய்த நெல் சாக்குகளில் மண் இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோதுமை:
கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயிகளிடமிருந்து அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 7 லட்சம் குவிண்டால் கோதுமை சம்பந்தப்பட்ட சிலாப்பில் சேமித்து வைக்கப்பட்டது, அதில் சுமார் 3 லட்சம் குவிண்டால் ஏற்கனவே பீகார் மற்றும் ஜார்கண்ட் தவிர மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொது விநியோக முறையின் (PDS) கீழ் விநியோகிக்கப்பட்டது.
கடந்த வாரம் அரசு கொள்முதல் செய்யும் கோதுமையுடன் மண், கான்கிரீட், தூசி கலக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதாவது அரசு தரப்பில் கொள்முதல் செய்யப்படவுள்ள கோதுமைகளை சேமிக்கும் சிலோவில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரியும் ஆயுஷ் பாண்டே என்பவர் இந்த வீடியோவை படம்பிடித்து பதிவேற்றம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிலோ நிர்வாகத்திடம் புகார் அளித்ததாகவும், ஆனால் அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் நிர்வாகம் தன்னை பணி நீக்கம் செய்ததாகவும் அவர் கூறினார்.
மண், கான்கிரீட் கலந்த கோதுமை:
பல துறைகளைச் சேர்ந்த குழு நடத்திய ஆய்வில், பிபிஎல் குடும்பங்களுக்கு விநியோகம் செய்வதற்காக உணவு தானியங்கள் அனுப்பப்படுவதற்கு முன்பு, பண்டா கிராமத்தில் உள்ள சிலாப் பகுதியில் அரசு கொள்முதல் செய்த கோதுமையுடன் மணல், கான்கிரீட் மற்றும் மண் தூள் கலக்கப்பட்டது தெரியவந்தது.
நேற்று (02/02/2023) செய்தியாளர்கள் சார்பில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. “இதுபோன்ற முறைகேடுகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள்,” என்று முதல்வர் சவுகான் கூறினார்.
குவியும் கண்டனங்கள்:
இதையடுத்து, சம்பந்தப்பட்ட சிலோ பேக் சேமிப்பு நிறுவனத்தின் கிளை மேலாளர் ஜோதி பிரசாத், பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆபரேட்டர் ஆயுஷ் பாண்டே மற்றும் நான்கு பேர் உட்பட 6 பேர் மீது ராம்பூர் பகேலன் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகம் செய்யும் உணவுப் பொருட்களில் மணல், மண், காங்கிரட், தூசு ஆகியவை திட்டமிட்டு கலக்கப்படுவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தில் பெரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.