20 ஆண்டுகளாக தேசிய பங்குச்சந்தையை இமயமலை யோகி கையில் வைத்திருந்தது எப்படி? நடந்தது என்ன?
20 ஆண்டுகளாக சாமியாரின் ஆலோசனைப்படி செயல்பட்ட சித்ரா ராமகிருஷ்ணன் ஒருமுறைகூட அந்த சாமியாரை நேரில் பார்த்தது இல்லை. சிரோண்மனி என்ற பெயரில் அந்த சாமியாரை சித்ரா அழைத்துள்ளார்
தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணன், சாமியார் ஒருவரிடம் கலந்தாலோசித்து பங்கு சந்தை தொடர்பான முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும், ரகசிய தகவல்களை அவருக்குப் பகிர்ந்ததாகவும் இந்திய பங்குச்சந்தைகளின் ஒழுங்காற்று அமைப்பான செபி தெரிவித்துள்ளது.
1994ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக ரவி நரேன் இருந்தார். இவருக்குப்பின் சித்ரா ராமகிருஷ்ணன் என்பவர் அந்தப் பதவிக்கு வந்தார். இவர் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை வரைபதவி வகித்தார். இந்தியாவின் மிகப் பெரிய பங்கு சந்தையான NSE எனப்படும் தேசிய பங்கு சந்தையை உருவாக்கி, வளர்த்தெடுத்து, பின்னர் அதன் நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் சிறப்பாக பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணன்.
2013இல் தேசிய பங்குச் சந்தையின் குழும நிர்வாக அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனரின் ஆலோசகராகவும் ஆனந்த் சுப்ரமணியம் என்ற முன் அனுபவம் குறைந்த இளைஞரை சித்ரா நியமனம் செய்தார். இதற்கு முன்பு பணியாற்றிய நிறுவனத்தில் ஆண்டு சம்பளமாக 15 லட்சம் ரூபாய் பெற்ற ஆனந்த் சுப்ரமணியத்திற்கு தேசிய பங்குச் சந்தையில் 1.68 கோடி ரூபாய் ஆண்டு சம்பளம் அளித்தார்.
அதுமட்டுமின்றி இரண்டே ஆண்டுகளில் ஆனந்தின் சம்பளத்தை ஆண்டுக்கு 3.33 கோடி ரூபாயாக அதிகரித்தார். இது முறைக்கேடான செயல் என்று சித்ரா ராமகிருஷ்ணன் மீது தேசிய இந்திய பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. தேசிய பங்கு சந்தையின் ரகசிய ஆவணங்கள் பலவற்றையும், ஒரு முகம் அறியாத சாமியார் ஒருவருக்கு மின்னஞ்சல் மூலம் சித்ரா அனுப்பியுள்ளது புலன் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்த சாமியாரை மானசீக குருவாக ஏற்றுள்ள சித்ரா, அவரின் வழிகாட்டலின் அடிப்படையில் ஆனந்த் சுப்ரமணியத்திற்கு வேலை கொடுத்ததாக ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இவற்றின் அடிப்படையில் சித்ரா மீது இந்திய பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையம் 3 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. தேசிய பங்குச் சந்தை நிறுவனம் சித்ராவிற்கு அளிக்க வேண்டிய போனஸ் மற்றும் நிலுவை தொகையான 4.37 கோடி ரூபாயை அவருக்கு அளிக்க கூடாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பங்குச் சந்தை தொடர்பான எந்த ஒரு அமைப்பிலும் சித்ரா பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு புதிய சேவைகள், திட்டங்களை அறிமுகப்படுத்த தேசிய பங்குச் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து செபி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, "என்எஸ்இயின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணன், கடந்த 20 ஆண்டுகளாக இமயமலையில் உள்ள ஒரு சாமியாரின் ஆலோசனையின்படிதான் நடந்துள்ளார். அவரின் அறிவுரைகள், கட்டளைப்படிதான் தேசியப் பங்குச்சந்தையையும் நடத்தியுள்ளார். தேசியப் பங்குசந்தையின் ரகசிய ஆவணங்கள், கோப்புகள் போன்றவற்றை மின்அஞ்சல் மூலம் அந்த சாமியாருக்கு அனுப்பிவைத்து அவரின் சொல்படி அனைத்து முடிவுகளையும் சித்ரா எடுத்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக சாமியாரின் ஆலோசனைப்படி செயல்பட்ட சித்ரா ராமகிருஷ்ணன் ஒருமுறைகூட அந்த சாமியாரை நேரில் பார்த்தது இல்லை. சிரோண்மனி என்ற பெயரில் அந்த சாமியாரை சித்ரா அழைத்துள்ளார். அந்த சாமியாரின் கட்டளைப்படிதான், என்சிஇ தலைமை செயல்அதிகாரிக்கு ஆலோசகராக அந்த துறைக்கே தொடர்புஇல்லாத சுப்பிரமணியம் என்பவர் 2013ம் ஆண்டு நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 3 முறை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.2.31 கோடியாக உயர்ந்தது. அதுமட்டுமல்லாமல் சர்வதேசப்பயணம், உள்நாட்டில் விமானத்தில் இலவசப் பயணம்,இதர சலுகைகள் என ஏராளமானவற்றை அந்த சாமியார் ஆலோசனைப்படி வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது." என்று கூறப்பட்டுள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணன் மின்அஞ்சலை ஆய்வு செய்துபார்த்தபோது, சுப்பிரமணியனுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை மட்டும் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு, அதிலும் 3 நாட்கள் மட்டும் வரலாம், விரும்பும் நேரத்தில் பணியாற்றலாம் என சலுகை அளிக்கப்பட்டுள்ளது. தேசியப் பங்குச்சந்தைக்கு ரூ.5 கோடிவரை இழப்பு ஏற்படுத்தியது, விதிமுறைகளைப் பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை சித்ரா ராமகிருஷ்ணன் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதலால், முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும், முன்னாள் செயல் அதிகாரி ரவி நரேன், ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியன், ஆகியோருக்கு தலா ரூ.2 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டை தடுக்காமல் இருந்த என்எஸ்இ ஒழுங்கு அதிகாரி வி.ஆர்.நரசிம்மனுக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராத தொகையை 45 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையை சாமியார் அறிவுரைப்படி நடத்திய சித்ரா ராமகிருஷ்ணா பங்கு தகவல்களை பல்வேறு நிறுவனங்களுக்கு ரகசியமாக பகிரும் ஊழலையும் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.