குஜராத் 'தங்க மனிதன்’ குஞ்சல் பட்டேல் திடீர் தற்கொலை.. என்ன நடந்தது?
“எங்கள் வீட்டில் மொத்தம் 115 தோலா தங்கம் இருக்கிறது; என்னுடைய நகைகள் 50 தோலா எடை வரும்.” - குஞ்சல் பட்டேல்
உடம்பெல்லாம் நகையாக வலம்வரும் ஹரிநாடார் போன்ற ஆள்கள் இங்கு மட்டுமல்ல, இந்தியா முழுக்கவும் இருப்பார்கள் போலும்! குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நம் ஊர் ஹரி அளவுக்கு இல்லாவிட்டாலும், கழுத்தில் சங்கிலிகளாகவும் கையில் பட்டைகளாகவும் காப்புகளாகவும் கண்ணாடி பிரேமாகாவும் அளவுக்கு அதிகமாக தங்கத்தை எப்போதும் சுமந்துகொண்டே இருப்பார், அந்தச் சின்ன ஹரி. அதில், அவருக்கு அப்படியொரு ஆனந்தம்!
இளைஞரான குஞ்சல், 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் அகமதாபாத்தில் சிவசேனா கட்சியின் சார்பில் போட்டியிட்டார். அப்போது அவர் தாக்கல்செய்த வேட்பு மனுவில், தன்னிடம் 45 தோலா தங்கம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். (தோலா..ன்னா - இப்படி ஒரு கேள்வி வரத்தான் செய்யும். 3 தோலா = 34.98 கிராம் என்கிறார்கள்; அதாவது, 6 தோலா = 69.96 கிராம்.) ஆனால், உள்ளூர்ச் செய்தியாளர்களிடம் அவர் சொன்ன தகவல்: “எங்கள் வீட்டில் மொத்தம் 115 தோலா தங்கம் இருக்கிறது; என்னுடைய நகைகள் 50 தோலா எடை வரும்.” இரண்டு கார்களும், 49 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் இருப்பதாகவும் அவர் தன்னுடைய வேட்பு மனுவில் தெரிவித்திருந்தார். காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களை எதிர்த்து அந்தத் தேர்தலில் கவர்ச்சியான வேட்பாளராக தொகுதியைச் சுற்றிவந்தார்... சும்மா இல்லை, இவ்வளவு நகைகளோடும்! பெண்களும் ஆண்களும் பாலின வேறுபாடு இல்லாமல் குஞ்சலை ஆவென அதிசயமாகப் பார்த்தனர். அதுவரை, உள்ளூர் அளவில் அறியப்பட்டவராக இருந்த குஞ்சல், தங்க மனிதர் என்கிற பெயரில் மாநிலம் முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார். அந்த பிரபலத்துக்கு மேல் தேர்தலில் அவருக்கு எதுவும் மிஞ்சவில்லை. டெபாசிட் காலி என அவரும் எதிர்பார்த்ததபடி இருந்திருக்கக்கூடும். அப்படியேதான் நடந்தது; மொத்தம் அவர் பெற்ற வாக்குகள் 1,393 வாக்குகள்தான்!
தேர்தல் முடிந்தாலும் ஆள் தன் அலம்பலை நிறுத்திக்கொள்வதாக இல்லை. வழக்கம்போல தங்கக் காப்புகளும் பட்டைகளும் கழுத்தில் சங்கிலிகளும் அவரிடமிருந்து அகலவில்லை. இதெல்லாம் அவர் தன்னளவில் செய்யும் அலப்பறைகள் மட்டுமல்ல, ஆளே கொஞ்சம்.. இல்லையில்லை அதிகமாகவே பஞ்சாயத்துக்காரர்தான்.. வண்டி வாங்கக் கடன் கொடுத்துவிட்டு பணத்தைக் கட்டாதவர்களிடம் அந்த வாகனங்களை எடுத்துவருவதுதான் இவர் செய்த தொழில்.. இப்படித்தான் குஞ்சால் அகமதாபாத்தில் அறியப்பட்டிருந்தார்.
கடந்த பிப்ரவரியில் குஜராத் மாநில பாஜக புதிய தலைவரான சிஆர்பாட்டீல் பங்கேற்ற கூட்டம் தாரியாபூர் எனும் இடத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதையொட்டி, உள்ளூர் பாஜக நிர்வாகியான சஞ்சய் லிம்பாச்சியா என்பவரை குஞ்சல் அழைத்து, “பாஜகவைச் சேர்ந்த ஒருவர்கூட அந்தப் பேரணிக்குப் போகக்கூடாது. மீறிப் போனால் மக்களைக் கூட்டி பேரணியில் கல்லை வீசுவோம்.” என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது தாரியாபூர் போலீஸ்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அகமதாபாத்தின் மாதுபுரா பகுதியில் வசித்துவந்த குஞ்சல், தன் வீட்டில் இறந்துகிடந்ததாகத் தகவல் வெளியானது. உள்ளூர் போலீஸ் சடலத்தைக் கைப்பற்றி, கூராய்வுக்கு அனுப்பியது. குஞ்சல் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதிந்து, காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். குஞ்சாலின் மரணம், மாநிலம் முழுவதையும் பரபரப்பாக்கிவிட்டது என்பது நூற்றுக்கு நூறு உண்மை!
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050