கொல்கத்தாவில் இரண்டில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ்.. திணறும் நகரங்கள்..
”மேற்கு வங்கத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை ஒப்பிட்டால், கொல்கத்தாவில் 50 முதல் 60 தொற்று சதவிகிதமாக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார் மாநில அரசு மருத்துவர்.
இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தொற்று, மிக வேகமாக தீவிரமடைந்திருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களாக மேற்கு வங்கத்திலும் பரவி வருகிறது. தற்போதைய நிலையில், மேற்கு வங்கத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. மேற்கு வங்கத்தில் நேற்று மட்டும் புதிதாக 14,281 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொல்கத்தாவில் நேற்று மட்டும் 20 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். புதிதாக 2,970 பேருக்கு நேற்று ஒரே நாளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில், கொரோனா பரிசோதனைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மேற்கு வங்கத்தில் பரிசோதனை மையங்களில் குவிந்துவருகிறார்கள் மக்கள். கொல்கத்தாவில் பரிசோதனை செய்து கொண்டவர்களில் அதிகபட்சமாக 45%-55% பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. கொல்கத்தாவுடன் ஒப்பிடும்போது, மாநிலத்தின் மற்ற பகுதிகளில் மிகவும் குறைந்த அளவிலேயே பாதிப்புகள் உறுதி செய்யப்படுவதாக அரசு மருத்துவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்துக்கு தெரிவிக்கிறார்.
”கொல்கத்தாவில் கடந்த சில வாரங்களில் மிக அதிகமாக பரவிவரும் நோய்த்தொற்றைப் பொருத்தவரை பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் இல்லை. அதைப்போலவே லேசான அறிகுறிகள் உணரப்பட்டாலும் மக்கள் பரிசோதனை மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். தற்போது, அனைவருக்கும் பரிசோதனை செய்வதில் 2 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேற்கு வங்கத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை ஒப்பிட்டால், கொல்கத்தாவில் 50 முதல் 60 தொற்று சதவிகிதமாக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.