Uniform Civil Code: பொது சிவில் சட்டம் இல்லை.. பொது சாதி சட்டம்தான் தேவை.. அம்பேத்கரை மேற்கோள் காட்டும் திமுக
பொது சிவில் சட்டத்தை முன்வைக்கும் முன் சாதி பாகுபாட்டை ஒழித்து சமத்துவத்தை கொண்டு வர வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் பாஜக அரசு:
"இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவைப்படுகிறது. வெவ்வேறு சமூகங்களுக்கு தனி சட்டங்கள் என்ற இரட்டை அமைப்புடன் நாடு இயங்க முடியாது" என பிரதமர் மோடி என பேசியிருந்தார். இந்த பேச்சின் மூலம் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுத்து வருவது தெளிவாகிறது.
இதற்கு, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தன்னுடைய நிலைபாட்டை விளக்கி 22ஆவது சட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது. பல்வேறு சட்ட நுணுக்கங்களை மேற்கோள் காட்டி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எழுதியுள்ள அந்த கடிதத்தில், பொது சிவில் சட்டம் தேவை இல்லை. பொது சாதி சட்டம்தான் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
"பொது சிவில் சட்டத்தை முன்வைக்கும் முன் சாதி பாகுபாட்டை ஒழித்து சமத்துவத்தை கொண்டு வர வேண்டும். அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் வருவதற்கு முன், சாதி பாகுபாடு மற்றும் கொடுமைகளை ஒழிக்க பொது சாதி சட்டம் தேவைப்படுகிறது.
"பொது சிவில் சட்டம் இல்லை..பொது சாதி சட்டம்தான் தேவை"
பொது சிவில் சட்டம், அனைத்து மதப்பிரிவு மக்களின் உரிமைகளின் மீதும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். மதச்சார்பற்ற நெறிமுறைகள், சட்டம் மற்றும் ஒழுங்கு, மாநிலத்தின் அமைதி மற்றும் மாநிலங்களுக்கு அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள சட்டமன்ற அதிகாரங்களில் தலையீடூம். பேரழிவு விளைவை ஏற்படுத்தும்.
சிங்கத்துக்கும் எருதுக்கும் ஒரே மாதிரியான சட்டம் என்பது அடக்குமுறையாகும். ஒவ்வொரு மதமும் தங்கள் நம்பிக்கைகள் மற்றும் மத நூல்களுக்கு ஏற்ப பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளதனித்துவமான, பழக்கம் மற்றும் பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளன. மிருகத்தனமான சக்தியால் அவர்களைத் துன்புறுத்துவது கொடுங்கோன்மை. அடக்குமுறைக்கு குறைவானது அல்ல. அது அரசால் செய்யப்படக்கூடாது.
இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக வாழும் தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு பொது சிவில் சட்டம் விரும்பத்தகாதது. அரசியல் ஆதாயங்களுக்காக பொது சிவில் சட்டம் போன்ற பிரிவினைச் சட்டம் கொண்டு வருவது தமிழ்நாட்டில் மதக் குழுக்களிடையே அமைதி, மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும். எனவே, பொதுமக்களின் நலன் கருதி வேண்டாம் என்கிறோம்.
"பொது சிவில் சட்ட விவகாரத்தை எச்சரிகையுடன் கையாள வேண்டும் என சொன்னவர் அம்பேத்கர்"
விரிவான ஆலோசனை மற்றும் ஆய்வுக்குப் பிறகு, 21வது சட்ட ஆணையம் 2018 ஆம் ஆண்டில், பொது சிவில் சட்டம் அவசியமில்லை அல்லது விரும்பத்தக்கது அல்ல என தெரிவித்தது. 21வது சட்ட ஆணையம் அதற்கு பதிலாக உரிமைகள் சார்ந்த அணுகுமுறையை முன்மொழிந்துள்ளது. சம உரிமைகளை வழங்குவதற்கும், இந்திய அரசியலமைப்பின் 14 வது பிரிவின் கீழ் உள்ள சமத்துவத்தை அடைவதற்கும் அந்தந்த தனிப்பட்ட சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதை பரிசீலிக்க வேண்டும்.
டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் கூட பொது சிவில் சட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். மேலும், பொது சிவில் சட்டத்திற்கு கட்டுப்பட விரும்புவோருக்கு முதலில் அதைப் பயன்படுத்த நாடாளுமன்றம் அனுமதிக்க வேண்டும் என விரும்பினார்.
வரைவுக் குழுவின் தலைவர் அளித்த உறுதிமொழிக்கு மாறாக, இன்று, மத்திய அரசு விரும்பாத சிறுபான்மையினரின் சிறப்பு அடையாளங்களை பறிக்க பொது சிவில் சட்டத்தை கட்டாயப்படுத்த முயற்சிக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.