புதுச்சேரியில் டெல்டா பிளஸ் பாதிப்பு இல்லை: ஆளுநர் தமிழிசை தகவல்
புதுச்சேரியில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு இல்லை என ஆளுநர் தமிழிசை பேட்டியளித்தார்.
புதுவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கொரோனா சிகிச்சைக்காக வழங்கப்பட்ட உபகரணங்களை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சுகாதாரத் துறையிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் எம்.பி., ஆளுநரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி, மாநில சுகாதார திட்ட இயக்கக இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்துகொண்டனர். அதை தொடர்ந்து ஆளுநர்தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- புதுவையில் நடத்தப்பட்ட தடுப்பூசி திருவிழாவின் போது ஒரு லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி தருவதாக குமரன் ஸ்டோர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா 3-வது அலை வரும் என்றும், வராது என்றும் சிலர் கூறுகின்றனர். இருந்த போதிலும் நாம் 3-வது அலையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
இந்த நிலையில் உருமாறிய டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் சில மாநிலங்களில் கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால் இந்த வகையான கொரோனா பாதிப்பு நமது மாநிலத்தில் இல்லை. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் கொரோனாவில் இருந்து பாதுகாக்க முடியும். ஊரடங்கில் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டெல்டா பிளஸ் வைரஸ் தாக்குதலை தடுக்க தடுப்பூசி எடுத்துக்கொள்வது அவசியம். புதுச்சேரி மாநிலத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு இது வரை கண்டறியப்படவில்லை. தமிழகத்தில் இதுவரை 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
டெல்டா பிளஸ் மிக வேகமாக பரவ கூடியது தான், எந்த வகை வைரஸாக இருந்தலும் தடுப்பூசி போட்டு கொண்டு முக கவசம் அணிந்தால் எதிர்கொள்ளலாம். புதுச்சேரியில் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது, இருப்பினும் பொதுமக்கள் பாதுகாப்புடனும் விழிப்புடன் செயல்பட வேண்டும், ஏனென்றால் டெல்டா பிளஸ் என்கின்ற வைரஸ் தற்போது வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இதனை எதிர்கொள்ள பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். புதுச்சேரியில் நடைபெறும் தடுப்பூசி திருவிழாவில் அதிக அளவில் மக்கள் தடுப்பூசி போட தொடங்கியுள்ளதால் தடுப்பூசி திருவிழா ஜூன் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, ஜூலை 1-ஆம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளேன். விமான நிலைய விரிவாக்கம் என்பது தமிழகம் - புதுவைக்கு நன்மையை தரும். சுற்றுலா மேம்படும். முதல்-அமைச்சர் வழங்கிய அமைச்சரவை பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் வருகிற 27-ந் தேதி மதியம் அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறும். இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.