அதிதீவிர புயலாக மாறிய யாஸ்; நாளை கரையை கடக்கிறது!
யாஸ் புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. வடக்கு ஒடிஷாவில் உள்ள பாலாசூர் பகுதியில் நாளை கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் கடந்த 18-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் கரையை கடந்தது. இதன் காரணமாக மேற்கு கடலோர பகுதிகளில் அனைத்து இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கேரளா பகுதிகளிலும் மழை அதிகமாக பதிவாகி , சேதத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் அடுத்த சில நாட்களிலேயே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவானது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மையம் பின்னர் புயலாக மாறியது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டது. இந்தப் புயலுக்கு ஓமன் நாடு கொடுத்த பெயர் இதுவாகும்.
இந்த புயல் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வடக்கு ஒடிஸா - பங்களாதேஷ் இடையே கரையை நாளை கடக்கும் என்று இந்திய தேசிய வானிலை மையம் தெரிவித்தது. அதன்படியே தற்போது யாஸ் புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இந்தப்புயல் வடக்கு ஒடிஷாவில் உள்ள பாலாசூர் பகுதியில் நாளை கரையைக் கடக்கக்கூடும் என்றும், கரையைக் கடக்கும்போது 165 kmph முதல் 185 kmph வரை காற்றுவீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் புயல் கரையைக் கடக்கும் பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்த ஆணையிட்டுள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள அவர், இந்த சவாலான கொரோனா காலக்கட்டத்தில் நமக்கு இன்னுமொரு சவாலாக புயல் உள்ளது. அனைவரின் உயிரையும் காப்பதே தலையாய கடமை. புயல் நெருங்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். யாஸ் புயலை சமாளிக்கும் விதமாக மேற்கு வங்கமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புயலின் தாக்கம் இல்லாவிட்டாலும், கடுமையான மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அதற்கேற்ப முதலமைச்சர் மம்தா பனர்ஜியின் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. யாஸ் புயல் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், அதனுடைய தாக்கம் கடலோர மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக வீசி வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக இதமான சூழல் நிலவுகிறது.
இந்தாண்டு டவ்தே புயலுக்கு பிறகு வரும் இரண்டாவது புயல் யாஸ் ஆகும். மேலும் வங்கக்கடலில் உருவாகும் முதல் புயல் இதுவாகும். அடுத்த சில நாட்களுக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் பகுதிகள் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் மீன்வர்கள் வரும் 26 தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கருப்பு பூஞ்சைக்கு தொழிற்சாலை ஆக்சிஜன் காரணமா? சந்தேகம் கிளப்பும் மருத்துவர்கள்!