Corona Virus : அதிர்ச்சி.. 11 நாள்களில் 11 வகை உருமாறிய கொரோனா வகை பாதிப்பு.. பரவல் எதனால்?
ஒமைக்ரானில் இருந்து உருமாறிய 11 வகை வைரஸ்களால் சர்வதேச பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
![Corona Virus : அதிர்ச்சி.. 11 நாள்களில் 11 வகை உருமாறிய கொரோனா வகை பாதிப்பு.. பரவல் எதனால்? Covid Variants Found In 124 International Passengers In 11 Days know details Corona Virus : அதிர்ச்சி.. 11 நாள்களில் 11 வகை உருமாறிய கொரோனா வகை பாதிப்பு.. பரவல் எதனால்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/05/917a24469fa170f507b8f85061ed4fc41672915854181224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த 11 நாள்களில், இந்தியாவுக்கு வந்திறங்கிய 124 சர்வதேச பயணிகளுக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கு கோவிட் - 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வழியாக 19,277 பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.
இவர்களில் 124 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அரசின் உயர் மட்ட அதிகாரிகள் தகவல் கூறுகின்றனர். ஒமைக்ரானில் இருந்து உருமாறிய 11 வகை வைரஸ்களால் இந்த பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
கடந்த சில மாதங்களாக இதன் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது அது மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்தால் அதை கையாளும் வகையில் தயார் நிலையில் உள்ளோமா? என்பதை உறுதி செய்ய சுகாதார மையங்களில் அவசர ஒத்திகை நடத்த மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டு கொண்டது.
அதன்படி, டிசம்பர் 27ஆம் தேதி, நாடு முழுவதும் உள்ள சுகாதார மையங்களில் அவசர ஒத்திகை நடத்தப்பட்டது. அதில், சுகாதார மையங்களில் போதுமான படுக்கைகள் இருக்கிறதா, நிலைமையை எதிர்கொள்ள தேவையான மனித வளம் இருக்கிறதா, ஆக்ஸிஜனை சப்ளை செய்வதற்கான தளவாடங்கள் இருக்கின்றனவா ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட்டது.
இந்தியாவில் முன்னதாக ஏற்பட்ட கொரோனா அலைகள், குறிப்பாக இரண்டாம் கொரோனா அலை, மருத்துவ சுகாதார கட்டமைப்பை உலுக்கி எடுத்தது.
மருத்துவமனைகளில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாததால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிக்க முடியாமல் திணறினர். தங்களின் உறவினர்களுக்காக படுக்கைகளை தேடி அலைந்த சம்பவம் எல்லாம் நடந்தது.
கடந்த டிசம்பர் 22ஆம் தேதி, கொரோனா நிலவரத்தை கண்காணிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட கூட்டம் நடத்தப்பட்டது. அதில், நாட்டில் உள்ள சுகாதார உள்கட்டமைப்புகளின் தயார் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மற்ற நாடுகளில், கொரோனா தாக்கம் உச்ச மடைந்த நிலையிலும், இந்தியாவில் அதன் தாக்கும் குறைந்தே காணப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 200க்கும் குறைவானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)