(Source: ECI/ABP News/ABP Majha)
அதிர்ச்சி! 54 இந்திய இருமல் மருந்துகள் ஏற்றுமதி தர பரிசோதனையில் தோல்வி
54 இந்திய மருந்து நிறுவனங்களின் இருமல் மருந்து மாதிரிகள் ஏற்றுமதி தர சோதனையில் தோல்வியடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகிலேயே சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் மருத்துவத்துறை என்பது உலகின் மிகவும் முக்கியமான மருத்துவத்துறையாகவும் திகழ்கிறது. இந்தியாவில் ஏராளமான நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மருந்துகள் பரிசோதனை:
இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் உள்பட பல மருந்துகள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சமீபகாலமாக, சில ஆப்பிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்திய மருந்துகள் காரணமாக சில குழந்தைகள் உயிரிழந்ததாக எழுந்த விவகாரம் பெரும் வேதனையை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிர்ணயம் நாடு முழுவதும் பல்வேறு மருந்துகளை ஏற்றுமதி தர பரிசோதனை செய்துள்ளது. மகாராஷ்ட்ரா, குஜராத், உத்தரபிரதேசம், சண்டிகர் உள்பட நாட்டின் முக்கியமான மருத்துவ பரிசோதனை கூடத்தில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
6 சதவீத மருந்துகள் தர பரிசோதனை தோல்வி:
மொத்தம் இந்த சோதனைக்கு 2 ஆயிரத்து 14 மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் இருந்து இந்த மாதிரிகள் சேரிக்கப்பட்டுள்ளது. இதில் 128 மாதிரிகள் அதாவது 6 சதவீத மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், அரசு தரப்பில் வெளியாகியுள்ள தகவலின்படி குஜராத் பரிசோதனை கூடத்தில் சோதனை செய்யப்பட்ட 351 மாதிரிகளில் 51 தரமற்று இருந்ததாக கூறப்படுகிறது. காசியாபாத்தில் நடத்தப்பட்ட 502 மாதிரிகளின் சோதனையில் 29 தரமற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகளினால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இருமல் மருந்துகளின் தரத்தை கண்காணிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெளிநாடுகளில் குழந்தைகள் மரணம்:
கடந்தாண்டு டிசம்பர் மாதம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு தயாரிக்கப்படும் இருமல் மருந்தே உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் மரணத்திற்கு காரணம் என்று செய்திகள் வெளியானது. காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பிற்கும் இந்திய இருமல் மருந்தே காரணம் என்றும் கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியாவின் பல நகரங்களில் இருமல் மருந்துகளின் மாதிரிகளே சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 54 மருந்து நிறுவனங்களின் மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தர பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளது. இந்த மருந்துகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: Cyclone Michaung: ஆந்திராவில் தீவிர புயலாக கரையை கடந்தது மிக்ஜாம் புயல்; மணிக்கு 100 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று
மேலும் படிக்க: சத்தீஸ்கரில் பழங்குடி பெண்தான் அடுத்த முதலமைச்சர்? பிரதமர் மோடியின் சர்ப்ரைஸ்