Chandrayaan 3: நாடே உற்றுநோக்கும் சந்திரயான் 3.. விண்கலத்தில் இருந்து இன்று பிரிகிறது லேண்டர் கருவி விக்ரம்.. அடுத்து என்ன?
நிலவை நெருங்கிய சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து, லேண்டர் கருவியான விக்ரம் இன்று தனியாக பிரிக்கப்படுகிறது.
நிலவை நெருங்கிய சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து, லேண்டர் கருவியான விக்ரம் இன்று தனியாக பிரிக்கப்படுகிறது.
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதி இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது. பின்பு புவியின் சுற்றுவட்டப் பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 20 நாட்கள் பயணம் மேற்கொண்டு கடந்த 5-ஆம் தேதி சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலம் நுழைந்தது.
சந்திரயானின் சுற்றுவட்டப்பாதை:
இதனைத்தொடர்ந்து, நிலவில் சுற்றுவட்டப் பாதையில் உள்ள சந்திரயான் – 3 கடந்த 6ம் தேதி முதன்முறையாக, நிலவை நோக்கி தள்ளப்பட்டது. அதன் பின்பு கடந்த 9, 14 மற்றும் நேற்று என அடுத்தடுத்து சந்திரயான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை தூரம் திட்டமிடப்பட்டபடி குறைக்கப்பட்டு நிலவிற்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டது. தற்போது, நிலவிற்கும் சந்திரயான்-3 விண்கலத்திற்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 153 கிலோ மீட்டர் மற்றும் அதிகபட்ச தூரம் 163 கிலோ மீட்டர் என்ற அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, லேண்டர் கேமரா மூலம் ஆகஸ்ட் 9ம் தேதி எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இதன் மூலம் லேண்டரில் உள்ள கேமராவின் செயல்பாடு தொடர்பான சோதனையும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.
பிரிக்கப்படும் லேண்டர்:
இந்நிலையில், ஒவ்வொரு கட்ட நவடிக்கைகளையும் இஸ்ரோ திட்டமிட்டபடி செய்து வரும் நிலையில், விண்கலத்திலிருந்து விக்ரம் எனும் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி இன்று நடைபெறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, விண்கலத்தில் புரபல்சன் மற்றும் விக்ரம் எனும் லேண்டர் என்ற இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. அந்த லேண்டரில் தான் ரோவர் கருவியும் அமைந்துள்ளது. தரையிறக்கத்திற்கு முன்னதாகவே புரபல்சன் எனும் அந்த உந்துவிசை கருவியையும், லேண்டரையும் தனியாக பிரிக்க வேண்டியுள்ளது. அப்படிப் பிரிக்கப்பட்ட லேண்டர் அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் முதல் குறைந்தபட்சமாக 30 கிலோமீட்டர் வரை நீள்வட்டப் பாதையில் செலுத்தப்படும். கடந்த 34 நாட்களாக சேர்ந்து பயணித்த புரபல்சன் மற்றும் லேண்டர் அமைப்புகள் இன்று பிரிந்து நிலவின் சுற்றுவட்டப்பாதயில் தனித்தனியாக வலம் வர உள்ளன.
இறுதிகட்டம்:
தொடர்ந்து, வரும் 23ம் தேதி வரையில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் லேண்டர் கருவி பயணம் மேற்கொள்ளும். அப்போது, லேண்டர் அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் முதல் குறைந்தபட்சமாக 30 கிலோமீட்டர் வரை நீள்வட்டப் பாதையில் நகர்த்தப்படும். லேண்டரின் அடிப்பகுதியில் நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அவற்றின் உதவியுடன், லேண்டர் மெல்ல மெல்லத் தரையிறக்கப்படும். அதன்படி வரும் 23ம் தேதி நிலவின் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்கியதும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களில் ஒன்று கீழ்நோக்கி சரியும். அந்த சாய்வுப் பலகையின் வழியே ரோவர் கீழே இறங்கி நிலவில் தடம் பதிக்கும். தொடர்ந்து பயணித்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது, பல்வேறு தகவல்களை சேகரித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்புவது தான் சந்திரயானின் இறுதி கட்டமாகும்.