Dindigul-Sabarimala Train: சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
தேனி மக்களின் நீண்ட நாள் கனவான, திண்டுக்கல் - சபரிமலை இடையேயான ரயில் பாதைக்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாகியுள்ளன. இதற்காக மத்திய அரசு செய்த ஒரு விஷயம் 3 மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திண்டுக்கல்லிலிருந்து சபரிமலைக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது, தேனி, திண்டுக்கல், கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவாக உள்ளது. தற்போது, அதை மெய்ப்பிக்கும் வகையில், முதற்கட்ட பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கை என்ன.?
சபரிமலைக்கு ஆண்டுதோறம் சுமார் ஒன்றரை கோடி பக்தரகள் வருகை தருகின்றனர். மாதம் தோறும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். இந்த நிலையில், திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என, தேனி, திண்டுக்கல், கேரளா இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கிட்டத்தட் 60 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், ரயில் பாதை திட்டம் நடைமுறைக்கு வராததால், சீசன் காலங்களில் பக்தர்கள் தேனி வழியாக வாகனங்களில் செல்கின்றனர். திண்டுக்கல் - சபரிமலை ரயில் பாதை திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக இருப்பதுடன், இரு மாநில மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இதனால், திண்டுக்கல், தேனி மற்றும் கேரளாவின் இடுக்கி மாவட்ட மக்கள், நீண்ட நாட்களாக ரயில் பாதைக்காக கோரிக்கை வைத்து வருகின்றனர். கோரிக்கை வைத்ததோடு நிற்காமல், தேனி மாவட்டத்தில், திண்டுக்கல் - குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்டக்குழுவும் தொடங்கப்பட்டு, தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
சபரிமலை வரை ரயில் பாதை அமைக்க முடியாவிட்டாலும், திண்டுக்கல் முதல் பம்பை வரையிலோ அல்லது லோயர் கேம்ப் வரையிலோ அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனிடையே, சபரிமலை வரையிலான ரயில் பாதை அமைப்பதற்கு மத்திய வனத்துறையின் அனுமதி தேவைப்படுவதால், அதற்கான சாதியக்கூறுகள் குறைவாகவே உள்ளதால், திண்டுக்கல் - பம்பை வரையிலான ரயில் பாதைக்கான ஆய்வு நிறைவடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் ஆண்டில் அந்த திட்டத்திற்கான அனுமதிக்கு முயற்சிகள் செய்யப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சாத்தியக்கூறுகளை ஆராய நிதி ஒதுக்கிய மத்திய அரசு
இந்நிலையில், திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து, 3 மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திண்டுக்கல் - சபரிமலை இடையேயான சுமார் 201 கிலோ மீட்டர் தூர ரயில்பாதை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள, 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதோடு, குமுளியிலிருந்து சபரிமலைக்கு 106 கிலோ மீட்டர் தூர ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, மத்திய அரசு 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதனால், திண்டுக்கல், தேனி, இடுக்கி(கேரளா) மாவட்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.





















