பூணூல் போட கூடாதா? தேர்வு அறையில் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு.. கொதிக்கும் பிராமணர்கள்
மாணவர்களிடம் பூணூல் (Janeu) கழற்ற சொன்னதாக எழுந்த சர்ச்சை கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பூணூல் கழற்ற சொன்ன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிராமணர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரத்தை முன்வைத்து இந்து அமைப்புகள், பாஜகவினர் பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

பொது நுழைவுத் தேர்வில் (CET) கலந்து கொள்ள சென்ற மாணவர்களிடம் பூணூல் (Janeu) கழற்ற சொன்னதாக எழுந்த சர்ச்சை கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பூணூல் கழற்ற சொன்ன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிராமணர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரத்தை முன்வைத்து இந்து அமைப்புகள், பாஜகவினர் பெரிய போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், தேர்வு நடந்த கல்லூரியின் முதல்வர், தேர்வு கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது, மத நம்பிக்கைகள் மீதான நேரடி தாக்குதல் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
வெடித்தது பூணூல் சர்ச்சை:
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள சாய் ஸ்பூர்த்தி PU கல்லூரியில் பொது நுழைவுத் தேர்வு (CET) எழுத சென்ற மாணவர்களிடம் பூணூல் கழற்ற சொன்னதாகக் கூறப்படுகிறது. சிமோகா மாவட்டம் சாரவதிநகரில் உள்ள ஆதிசுஞ்சனகிரி பள்ளியிலும் இதே போன்ற சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் சுசிவரத் குல்கர்னி கூறுகையில், "கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி எனக்கு கணித CET தேர்வு இருந்தது. நான் தேர்வு மையத்திற்கு சென்றதும், கல்லூரி நிர்வாகம் என்னைச் சோதனை செய்தது. என் பூணூல் பார்த்தார்கள். அதை அறுக்க சொன்னார்கள் அல்லது அகற்றச் சொன்னார்கள்.
அதன் பிறகுதான், தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என அவர்கள் சொன்னார்கள். 45 நிமிடங்கள், நான் அவர்களிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால், இறுதியாக நான் வீட்டிற்குத் திரும்ப வேண்டியிருந்தது. மறு தேர்வு நடத்த வேண்டும் அல்லது அரசு கல்லூரியில் இடம் வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன்" என்றார்.
பிராமணர்கள் எதிர்ப்பது ஏன்?
இந்த சம்பவங்களை கண்டித்து கர்நாடகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. கலபுர்கி மற்றும் பீதரில், பிராமண அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு நீதி கோரியும், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் போராட்டத்தில் இறங்கினர்.
தாவணகெரே, சித்ரதுர்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு போராட்டம் பரவியுள்ளது. மைசூரில், இதற்குக் காரணமானவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று கோரி சுமார் 300 போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து, சாய் ஸ்பூர்த்தி PU கல்லூரியின் முதல்வர் டாக்டர் சந்திர சேகர் பிரதார், கல்லூரி ஊழியர் சதீஷ் பவார் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
கர்நாடக அரசு விளக்கம்:
இந்த விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான பிரகலாத் ஜோஷி, "இரண்டு பேரை மட்டும் இடைநீக்கம் செய்வது போதாதது. பூணூலை, பிராமணர்கள் மட்டும் அணிவதில்லை. இது நம்பிக்கையை பற்றியது. அரசாங்கம் உடனடியாக தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். நிர்வாக சீர்கேட்டை மறைக்க காங்கிரஸ் இதுபோன்ற வழிமுறைகளை கையாண்டு வருகிறது" என்றார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் எம்.சி. சுதாகர், "இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது சிமோகாவில் மட்டுமல்ல, பீதரிலும் நடந்துள்ளது. இரண்டு மையங்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் நடைமுறை சரியாக இருந்தது. நாங்கள் எல்லா மதங்களையும், அவர்களின் நம்பிக்கையையும், அவர்களின் செயல்களையும் மதிக்கிறோம். இதை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

