மனித கழிவை மனிதர்களே அள்ளும் அவலத்திற்கு முடிவு கட்ட போராடிய மாமனிதர்.. சமூக சேவகர் பிந்தேஷ்வர் பதக் காலமானார்..!
மனித கழிவை மனிதர்களே அள்ளும் முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தீவிரமாக இயங்கி வந்தவர் சமூக ஆர்வலர் பிந்தேஷ்வர் பதக்.
கையால் மலம் அள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ள போதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு முதல், இந்த தொழிலில் ஈடுபட்டவர்களில் குறைந்தபட்சம் 351 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மனித கழிவை மனிதர்களே அள்ளும் முறைக்கு எதிராக தீவிரமாக இயங்கிய பிந்தேஷ்வர் பதக்:
மனித கழிவை மனிதர்களே அள்ளும் முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தீவிரமாக இயங்கி வந்தவர் சமூக ஆர்வலர் பிந்தேஷ்வர் பதக். சுலப் இன்டர்நேஷனல் என்ற சமூக சேவை அமைப்பின் நிறுவனரான பிந்தேஷ்வர் பதக், இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 80. டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இவரின் உயிர் பிரிந்தது.
77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு காலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிந்தேஷ்வர் பதக், அதன் பிறகு சிறிது நேரத்திலேயே சரிந்து கீழே விழுந்தார். இதை தொடர்ந்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிற்பகல் 1.42 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இவரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "பிந்தேஷ்வர் பதக்கின் மறைவு நமது தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பு. சமூக முன்னேற்றத்திற்காகவும், ஒடுக்கப்பட்டோருக்கான அதிகாரம் அளிப்பதற்காகவும் அவர் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டார். தூய்மையான இந்தியாவை உருவாக்குவதை தனது பணியாகக் கொண்டவர் பிந்தேஷ்வர். அவர் ஸ்வச் பாரத் மிஷனுக்கு மகத்தான ஆதரவை வழங்கினார். எங்களின் பல்வேறு உரையாடல்களின் போது, தூய்மை மீதான அவரது ஆர்வம் வெளிப்படையாக தெரிந்தது" என குறிப்பிட்டுள்ளார்.
56 லட்சம் கழிவறைகளை கட்டி தந்த சமூக சேவகர்:
சமூக சீர்திருத்தவாதியான பதக், கிட்டத்தட்ட 13 லட்சம் வீட்டு கழிப்பறைகளையும், 54 லட்ச பொது கழிப்பறைகளையும் குறைந்த விலையில், இரண்டு குழி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டியுள்ளார்.
கழிப்பறைகள் கட்டுவதைத் தவிர, மனித கழிவை மனிதர்களே அள்ளும் முறைக்கு எதிராக சுலப் இன்டர்நேஷனல் சமூக சேவை அமைப்பு தீவிரமாக இயங்கி வந்தது.
பிந்தேஷ்வர் பதக்கின் வரலாறு:
டாக்டர் பிந்தேஷ்வர் பதக், பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பாகேல் கிராமத்தில் பிறந்தார். இவரது தாயாரின் பெயர் யோக்மாயா தேவி. தந்தை ரமாகாந்த் பதக்.
படிப்பை முடித்த பிறகு, பாட்னாவில் உள்ள காந்தி நூற்றாண்டு கமிட்டியில் தன்னார்வத் தொண்டராகச் சேருவதற்கு முன்பு சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாகர் பல்கலைக்கழகத்தில் குற்றவியலில் முதுகலைப் படிப்பை படிக்க விரும்பினார்.
சாகருக்குப் பயணம் செய்யும்போது, காந்தி நூற்றாண்டு குழுவில் சேருமாறு இரண்டு பேர் இவருக்கு அறிவுறுத்தியுள்ளனர். அவருக்கு நல்ல ஊதியம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால், கமிட்டியை அணுகியபோது, வேலை இல்லை என்பது தெரிந்தது. சாகரில் சேர்வதற்கான காலக்கெடுவை அவர் தவறவிட்டதால், அவர் தன்னார்வலராக வேலை செய்ய முடிவு செய்தார்.