Bill Gates Meet PM Modi: இந்தியா மீது முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கை உள்ளது - மோடியை சந்தித்த பில் கேட்ஸ் பாராட்டு
இந்திய சுகாதாரத் துறையில் புதுமைகள், காலநிலை மாற்றம், ஜி20 அமைப்பை தலைமை தாங்கி வரும் இந்தியா, மற்றும் பிற முக்கியப் பிரச்னைகள் பற்றி மோடியிடம் ஆலோசனை மேற்கொண்டதாக பில் கேட்ஸ் கூறியுள்ளார்.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருப்பவர் பில் கேட்ஸ். இவர், பிரதமர் மோடியை சந்தித்து நேற்று பேசியுள்ளார். இந்திய சுகாதாரத் துறையில் புதுமைகள், காலநிலை மாற்றம், ஜி20 அமைப்பை தலைமை தாங்கி வரும் இந்தியா, மற்றும் பிற முக்கியப் பிரச்னைகள் பற்றி மோடியிடம் ஆலோசனை மேற்கொண்டதாக பில் கேட்ஸ் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு பாராட்டு:
தன்னுடை அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் இதுகுறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட பில் கேட்ஸ், இந்தியாவை பாராட்டி எழுதியுள்ளார். "கேட்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் பல பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் மலிவு விலையில் தடுப்பூசிகளை தயாரிக்கும் அற்புதமான திறன் கொண்டிருக்கிறது. இந்த தடுப்பூசிகள் கொரோனா பெருந்தொற்றின் போது மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது. உலகெங்கிலும் உள்ள பிற நோய்களைத் தடுத்தது. புதிய உயிர்காக்கும் கருவிகளை தயாரிப்பதோடு, இந்தியாவும் அவற்றை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது.
இந்தியாவின் பொது சுகாதார அமைப்பு 2.2 பில்லியனுக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசிகளை Co-WIN செயலி மூலம் விநியோகம் செய்ய பயன்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்க பயன்பட்டுள்ளது. Co-WIN உலகத்திற்கே முன்மாதிரி என்று பிரதமர் மோடி நம்புகிறார். நான் அதை ஒப்புக்கொள்கிறேன்"
கொரோனா பெருந்தொற்றின்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனையை விரிவாக்கம் செய்த இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்த பில் கேட்ஸ், "200 மில்லியன் பெண்கள் உட்பட குறைந்தது 300 மில்லியன் மக்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பணம் பெற்றுள்ளனர்.
அனைவரையும் உள்ளடக்கிய நிதி அமைப்புக்கு முன்னுரிமை அளித்து, டிஜிட்டல் அடையாள அமைப்பில் (ஆதார் என்று அழைக்கப்படும்) முதலீடு செய்து, டிஜிட்டல் வங்கிக்கான புதுமையான தளங்களை உருவாக்குவதால் மட்டுமே இது சாத்தியமானது. நிதிச் சேர்க்கை ஒரு அருமையான முதலீடு என்பதை நினைவூட்டுகிறது"
பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசிய பில் கேட்ஸ்:
இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட கதி சக்தி திட்டம் குறித்து குறிப்பிட்டுள்ள அவர், "டிஜிட்டல் தொழில்நுட்பம் எவ்வாறு அரசாங்கங்கள் சிறப்பாக செயல்பட உதவும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இது ரயில் மற்றும் சாலைகள் உட்பட 16 அமைச்சகங்களை டிஜிட்டல் முறையில் இணைக்கிறது.
எனவே, அவர்கள் உள்கட்டமைப்பு வசதிகளுக்கான திட்டங்களை ஒருங்கிணைத்து இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் பணியை துரிதப்படுத்த முடியும்"
ஜி 20 அமைப்புக்கு தலைமை தாங்கி வரும் இந்தியா குறித்து எழுதியுள்ள அவர், "நாட்டில் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் உலகிற்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதை எடுத்துக்காட்டுவதற்கும், மற்ற நாடுகள் அவற்றை ஏற்றுக்கொள்ள உதவுவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பு.
சுகாதாரம், மேம்பாடு மற்றும் காலநிலை ஆகியவற்றில் இந்தியா செய்து வரும் முன்னேற்றம் குறித்து முன்னெப்போதையும் விட அதிக நம்பிக்கை உள்ளது. நாம் கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்யும்போது என்ன சாத்தியப்படும் என்பதை இந்தியா சுட்டி காட்டுகிறது. இந்தியா இந்த முன்னேற்றத்தைத் தொடரும். அதன் கண்டுபிடிப்புகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் என்று நம்புகிறேன்"