Helmet Importance : தலைக்கவசம், உயிர்க்கவசம்: எத்தனை முறை சொன்னாலும் மனம் மாறாமல் இருப்பவர்களுக்காக ஒரு வீடியோ
தலைக்கவசம் உயிர்க்கவசம் என்று எத்தனை முறை சொன்னாலும் கூட நம் நாட்டு இருசக்கர வாகன ஓட்டிகள் கேட்பதில்லை. அதனால் தான், ஒவ்வொரு 6 நிமிடத்திற்கும் சாலை விபத்தில் ஒருவர் பலி
தலைக்கவசம் உயிர்க்கவசம் என்று எத்தனை முறை சொன்னாலும் கூட நம் நாட்டு இருசக்கர வாகன ஓட்டிகள் கேட்பதில்லை. அதனால் தான், ஒவ்வொரு 6 நிமிடத்திற்கும் சாலை விபத்தில் ஒருவர் பலி; இரண்டு நிமிடங்களுக்கு இருவர் காயம் அடைகின்றனர் என்ற புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. இதில் இருசக்கரம், 4 சக்கரம் என எல்லா வாகங்களும் அடங்கும்.
வைரல் வீடியோ:
டெல்லி போலீஸார் அவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளனர். அதில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர் இன்னொரு வாகனத்துடன் மோதுவதைத் தவிர்த்து வேகமாக வேறு திசையில் பாய எதிர்பாராத விதமாக அவர் ஒரு லேம்ப் போஸ்டில் மோதுகிறார். ஒரு வழியாக சுதாரித்து எழுந்து நிற்க முயலும் அந்த நபரின் தலையில் அவர் பைக்குடன் மோதியதால் முறிந்த லேம்ப் போஸ்ட் அவர் தலையில் விழுகிறது. ஐய்யோ ஆள் பிழைத்தாரா என்று நீங்கள் பதறுவது எங்களுக்குக் கேட்கிறது. ஆனால் அந்த நபர் எந்தவித பெரிய காயமும் இல்லாமல் தப்பித்துவிடுகிறார். காரணம் அவர் ஹெல்மெட் அணிந்திருக்கிறார். இந்த வீடியோவைப் பகிர்ந்த போலீஸார் இருச்சக்கர வாகன ஓட்டிகள் இதைப் பார்த்தாவது இனி தவறாமல் ஹெல்மெட் அணியுங்கள் என்று வலியுறுத்தியுள்ளனர்.
God helps those who wear helmet !#RoadSafety#DelhiPoliceCares pic.twitter.com/H2BiF21DDD
— Delhi Police (@DelhiPolice) September 15, 2022
விபத்து புள்ளிவிவரம்:
இந்தியாவில் சாலை விபத்துகள் பற்றிய புள்ளிவிவரம் வெளியாகி இருக்கிறது. 2021ஆம் ஆண்டில் இந்தியா முழுக்க பதிவு செய்யப்பட்ட கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், பெண்களுக்கெதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள், உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் மற்றும் சாலை விபத்துகள், ரயில் விபத்துகள் உள்ளிட்ட தகவல்கள் குறித்த மொத்த ஆவணத்தொகுப்பான தேசிய குற்றவியல் ஆவண காப்பக அறிக்கை அண்மையில் வெளியானது.
இந்நிலையில் தேசிய குற்றவியல் ஆவண காப்பக அறிக்கையை ஆராய்ந்து பார்த்தால், அதில் இந்தியாவில் ஒவ்வொரு 6 நிமிடமும் ஒரு இந்தியர் சாலை விபத்தில் அதுவும் அதிவேகமாக வாகனத்தை இயக்கி நடக்கும் விபத்தில் உயிரிழக்கிறார். அதேபோல் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு இருவர் அதிவேகமாக வாகனத்தை இயக்குவதால் காயமடைகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புள்ளிவிவரத்தின் படி கடந்த ஆண்டு (2021) வேகமாக வாகனம் ஓட்டி நடந்த விபத்துகளில் 87,050 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெண்கள் 11,190 பேர் உயிரிழந்தனர். 2,28.274 பேர் காயமடைந்தனர். நாட்டில் 60 சதவீதம் சாலை விபத்துகளுக்கு அதி வேகத்தில் வாகனத்தை இயக்குவதே காரணமாக உள்ளது. இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 4,03,116 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதுவே 2020 ஆம் ஆண்டில் 3,54,796 ஆக இருந்தது. அதேபோல் 2021ல் சாலை விபத்தில் உயிரிழப்புகள் 1,55,622 ஆக அதிகரித்துள்ளது. 2020ல் சாலை விபத்தில் உயிரிழப்புகள் 1,33,201 ஆக இருந்தது.
2020-ஐ விட 2021-ல் மிக அதிகமாக சாலை விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டில் 57,090 சாலை விபத்துகளும், மத்தியப் பிரதேசத்தில் 49,493 விபத்துகளும், உத்தரப் பிரதேசத்தில் 36,509 விபத்துகளும், மகாராஷ்டிராவில் 30,086 விபத்துகளும், கேரளாவில் 33,501 விபத்துகளும் நடந்துள்ளன. இறப்பு விகிதத்தைப் பொருத்தவரை மொத்த விபத்துகளில் 3,73,884 பேர் காயமடைந்தனர், 1,73,860 பேர் உயிரிழந்தனர். இவர்களில் உத்தரப்பிரதேசத்தில் 24,711 பேர் இறந்தனர். தமிழகத்தில் 16,685 பேர் இறந்தனர். மகாராஷ்டிராவில் 16,446 பேர் இறந்தனர். இந்த மூன்று மாநிலங்கள் மட்டுமே முறையே 14.2%, 9.6% மற்றும் 9.5% சாலை விபத்து உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளன. மொத்தமாக இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் 33.3 சதவீத இறப்பு பதிவாகியுள்ளது.