Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக ஆட்சி நடக்கும் நிலையில், சபாநாயகர் பதவிக்காக இரு கட்சி இடையே மோதல் உண்டாகியுள்ளது.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தலா 101 தொகுதிகளில் பாஜக-வும், ஐக்கிய ஜனதா தளமும் போட்டியிட்ட நிலையில் பாஜக 89 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
புதிய சபாநாயகர் யார்?
பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றாலும் கடந்த 2005ம் ஆண்டு முதல் தன்வசம் வைத்திருந்த உள்துறையை நிதிஷ்குமார் பாஜக-விடம் பறிகொடுத்தார். மேலும், அந்த மாநிலத்தின் முக்கிய துறைகளான சட்டம், விவசாயம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் போன்ற பல துறைகள் பாஜக வசம் சென்றது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தின் புதிய சபாநாயகர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய சபாநாயகரை நியமிக்கும் விவகாரத்தில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.
பாஜக - ஐக்கிய ஜனதா தளம் மோதல்:
பாஜக தங்களது எம்எல்ஏ-வான ப்ரேம்குமாரை சபாநாயகராக நியமிக்க வேண்டும் ஆர்வம் காட்டி வருகிறது. அவர் கயாநகரத்தில் இருந்து 9வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாஜக-வின் மூத்த தலைவர் ஆவார்.
அதேசமயம், முதலமைச்சர் பதவியை தன்வசம் வைத்துள்ள ஐக்கிய ஜனதா தளம் சபாநாயகர் பதவி தங்களுக்கே வேண்டும் என்று விடாப்பிடியாக உள்ளது, அவர்கள் தாமோதர் ராவத்தை சபாநாயகர் வேட்பாளராக தேர்வு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதிகாரத்திற்காக மோதல்:
முதலமைச்சராக நிதிஷ்குமார் இருந்தாலும் அவர் வசம் எந்த மிகப்பெரிய துறைகளும் இல்லை. அமைச்சரவை கண்காணிப்பு, பொது நிர்வாகம் போன்ற துறைகள் மட்டுமே அவர் வசம் உள்ளது. இந்த சூழலில், சபாநாயகர் பதவியையும் பாஜக வசம் கொடுத்தால் அனைத்து அதிகாரங்களும் பாஜக வசம் செல்லும் அபாயம் உள்ளதாக ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கிய தலைவர்கள் அச்சப்படுகின்றனர்.
ஏற்கனவே நிதிஷ்குமார் முக்கிய துறைகளை பாஜக வசம் தாரைவார்த்து விட்டதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவர் மீது சற்று அதிருப்தியில் உள்ளனர். இந்த சூழலில், சபாநாயகர் பதவியையும் பாஜக-விடம் தாரை வார்த்தால் கட்சியில் அவர் மீது மேலும் அதிருப்தி உண்டாகும் சூழல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால், எப்படியேனும் சபாநாயகர் பதவியை தங்கள் வசம் கொண்டு வர வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் ஆர்வம் காட்டி வருகிறது.
சபாநாயகர் பதவியை தங்கள் பக்கம் கொண்டு வருவதன் மூலம் அதிக அதிகாரத்தை பெற இரண்டு கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.






















