Crime: அதீத போதையில் ஆட்டோவில் பயணித்த நபர்.. பணத்தால் வாக்குவாதம்.. கட்டாயப்படுத்தி வல்லுறவு கொண்ட டிரைவர்!
பாதிக்கப்பட்ட நபர் நேற்று காவல்துறையினரை அணுகி, தன்னை வலுக்கட்டாயமாக இயற்கைக்கு மாறாக அந்த டிரைவர் வல்லுறவு கொண்டதாக புகார் அளித்தார்.
மும்பை அடுத்த காட்கோபரின் புறநகர் பகுதியில் குடிபோதையில் இருந்த ஆண் பயணியுடன் இயற்கைக்கு மாறான வல்லுறவில் ஈடுபட்டதாக 25 வயது ஆட்டோ டிரைவர் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்த மொபைல் போன் மற்றும் ஏடிஎம் கார்டையும் டிரைவர் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
என்ன நடந்தது..?
கடந்த சனிக்கிழமை இரவு, அதிக குடிபோதையில் இருந்த 31 வயது ஆண் பயணி மும்பையை அடுத்த காட்கோபரில் உள்ள ஆட்டோவில் ஏறியுள்ளார். அப்போது, போதையில் இருந்த அந்த நபர் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லுமாறு டிரைவரிடம் கூறியுள்ளார். ஆனால், அது எந்த இடம் மட்டும் குறிப்பிடவில்லை.
சரியாக ஒரு மணி நேரத்திற்கு பிறகு பயணி இறுதியாக ஆட்டோவில் இருந்து கீழே இறங்கியுள்ளார். அப்போது, அந்த டிரைவர் பயணித்த செலவானது ரூபாய் 250 ஆகிவிட்டது. அதை தருமாறு கேட்கவே, பயணி டிரைவரிடம் வெறும் 100 ரூபாயை மட்டும் கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து இருவருக்கும் நீண்ட நேரமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மிகவும் ஆத்திரமடைந்த டிரைவர், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து அந்த நபரை அருகிலிருந்த தோட்டத்திற்கு அழைத்து சென்று அவருடன் வலுக்கட்டாயமாக இயற்கைக்கு மாறான வல்லுறவு கொண்டுள்ளார்.
தொடர்ந்து, டிரைவர் அந்த பயணியிடம் அவரிடம் இருந்த ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்து தருமாறு தொல்லை செய்துள்ளார். அதற்கு அந்த பயணி மறுக்கவே, அவரிடம் இருந்த மொபைல் போன் மற்றும் ஏடிஎம் கார்டை எடுத்து சென்றுள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் நேற்று காவல்துறையினரை அணுகி, தன்னை வலுக்கட்டாயமாக இயற்கைக்கு மாறாக அந்த டிரைவர் வல்லுறவு கொண்டதாகவும், தன்னிடம் இருந்த மொபைல் போன் மற்றும் ஏடிஎம் கார்டை புடுங்கி சென்றதாகவும் புகார் அளித்துள்ளார். மேலும், தன்னிடம் இருந்த போனை மட்டுமாவது திரும்ப பெற்று தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 377 (இயற்கைக்கு மாறான வல்லுறவு), 394 (கொள்ளை செய்வதில் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.