திருப்பதியில் சுத்தப்படுத்தும் பரிகாரம் விரைவில் அறிவிக்கிறார் ஆந்திரா சி.எம்.
300 ஆண்டுளாகத் தயாராகும் திருப்பதி லட்டு வரலாற்றில் மாட்டுக் கொழுப்பு கலப்பு பிரச்சினை, புதிய கடும் விதிமுறைகளுக்கு வழி ஏற்படுத்தியுள்ளது.
கோவில் பிரசாதமாக சர்வதேச பிரசித்திப் பெற்ற திருப்பதி லட்டு தற்போது மாட்டுக் கொழுப்பு பிரச்சினையால் பட்டிதொட்டியெங்கும் பேசுப் பொருளாகிவுள்ளது. இது, அது என பல காரணங்கள் கொடுக்கப்பட்டாலும், தற்போது லட்டு தயாரிப்பிலும், அதன் தர கண்காணிப்பிலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு விடை தேடும் வகையில், தற்போது TTD எனும் ஆங்கிலத்தில் சுருங்கமாக அழைக்கப்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீவிரமாக இறங்கியுள்ளது.
கோடிக்கணக்கான பக்தர்களின் மனம் புண்படும் வகையில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் குறித்து, பல்வேறு விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் சில தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். யதார்த்தைச் சொல்ல வேண்டுமென்றால், பக்தர்களைவிட அரசியல்வாதிகள்தான், இந்தப் பிரச்சினையைப் பெரும் அக்கப்போராக மாற்றி வருகின்றனர் என்பது கண்கூடு.
தினமும் சுமார் 3 லட்சம் லட்டுகள் வரை தயாரிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, ஆண்டுதோறும் சுமார் 500 கோடி ரூபாய் வருவாய் தரக்கூடிய திருப்பதி லட்டு தயாரிப்பில், உச்சக்கட்ட தரக் கண்காணிப்பு இருக்க வேண்டும் என்பதே, சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு வந்த பக்தர்களின் கருத்தாக எதிரொலிக்கிறது. லட்டு வாங்கக் கொடுக்கும் பணம், தங்களுக்கு ஒரு பொருட்டல்ல எனக் கூறும் பக்தர்கள், கடவுளின் பிரசாதம் எனும் போது தரச் சோதனை என்பது கூடுதல் கவனத்துடன் இல்லாமல் இருந்தது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் சிலர் அரசியல்வாதிகளின் அக்கப்போருக்கு, எங்களின் நம்பிக்கையும் கடவுளின் பிரசாதமும் அலைக்கழிக்கப்படுகிறது எனக் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கிடையே, இந்தப் பிரச்சினையின் நதிமூலம், ரிஷி மூலம் என அனைத்துக் கோணங்களிலும் ஓர் உண்மை கண்டறியும் அறிக்கையை, TTD தயாரித்து வருகிறது. அதன் நிர்வாக அதிகாரியான ஷியாமளா ராவ், அதை ஆந்திர முதலமைச்சரிடம் ஒப்படைக்க இருக்கிறார். அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள், குறிப்பாக சட்ட நடவடிக்கை, ஏன் கைது கூட செய்யலாம் எனக் கூறப்படுகிறது.
அது மட்டுமல்ல, பண்டிதர்கள், ஆச்சார்யர்கள் உள்ளிட்டோரிடம் கலந்து பேசி, கோவிலுக்கும் லட்டு தயாரிக்கும் இடத்திலும் சுத்தப்படுத்தும் பணி நடத்துவதா அல்லது குடமுழுக்கு போன்றவற்றை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளாராம். எனவே, TTD விசாரணை அறிக்கை வந்தவுடன், அதற்குரிய பரிகார நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு முதல்வர் சந்திரபாபு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தற்போது தயாராகும் லட்டுகள் அனைத்தும் எந்தவித கலப்படமும் இன்றி தயாராகின்றன என TTD நிர்வாகம் அறிவித்துள்ளது.