இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும் முன்னோடி திட்டம்: அக்னிபத் குறித்து ரிலையன்ஸ் புகழாரம்
இத்திட்டத்தை வரவேற்றுள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும் முன்னோடி திட்டம் என இதற்கு புகழாரம் சூட்டியுள்ளது.
பாதுகாப்பு படை வீரர்களை பணியில் சேர்ப்பதற்கான அக்னிபத் என்ற புதிய திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக மத்திய அமைச்சரவை, ஜூன் 14 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
அக்னி பாதை திட்டத்தின்கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள் எனவும் இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின் முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் அனைத்து வகுப்புகளில் இருந்து 46 ஆயிரம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 90 நாட்களுக்குள் அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது மொத்த ராணுவப் படைகளில் 3 சதவீதம் மட்டுமே. இதனால் ராணுவத்தின் பிற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே உள்ள கல்வித் தகுதி, உடல் தகுதி நடைமுறைகள் பின்பற்றப்படும். அக்னிபத் திட்டத்தில் இணைபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பின்னர் 4 ஆண்டுகளுக்கு அக்னி வீரர்கள் பணியாற்றுவர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படும்.
அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் வழங்கப்படும். 4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, பணிக்கால செயல்திறன் அடிப்படையில், அதிகபட்சமாக 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 4 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு, சேவை நிதியும் திறன் சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களிப்பு இல்லாத ரூ.48 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் தொகை அளிக்கப்படும். பணியின்போது மரணமடைந்தால் ரூ.44 லட்சம் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இத்திட்டத்தை வரவேற்றுள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும் முன்னோடி திட்டம் என இதற்கு புகழாரம் சூட்டியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திறமை, ஒழுக்கம் உள்ளிட்டவற்றை உள்வாங்கும் அதே சமயத்தில் நாட்டுக்கு சேவையாற்றும் வகையிலும் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாக்கி தரும் நோக்கிலும் கொண்டுவரப்பட்ட முன்னோடி திட்டம் அக்னிபத். சமூகத்தில் மகத்தான மதிப்பை கொண்ட நல்ல பயற்சிமிக்க ஒழுக்கமான படைகளை உருவாக்க இது உதவும்.
கடந்த பல ஆண்டுகளாக, ஓய்வு பெற்ற முப்படை வீரர்களுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பணி வழங்கி வருகிறது. அந்த வகையில், அக்னிவீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி நமது அணியை வலுப்படுத்த எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.