Aditya L1: அதிகாலையிலேயே இஸ்ரோ செய்த அடுத்த சம்பவம்: அடுத்தடுத்து மேஜிக் செய்யும் ஆதித்யா எல் 1
சூரியனை நோக்கி பயணிக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் 2வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சூரியனை நோக்கி பயணிக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் புவியின் சுற்று வட்டப்பாதையில், குறைந்தபட்சமாக 282 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இஸ்ரோ போட்ட டிவீட்:
இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், சூரியனை நோக்கி பயணிக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் 2வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வின் போது, மொரீஷியஸ், பெங்களூரு மற்றும் போர்ட் பிளேயரில் உள்ள ISTRAC/ISROவின் தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களில் இருந்து செயற்கைக்கோள் கண்காணிக்கப்பட்டது. வெற்றிகரமான நடவடிக்கையை தொடர்ந்து செயற்கைகோளானது புவியிலிருந்து குறைந்தபட்ச தூரமாக 282 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 40225 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. தொடர்ந்து, செயற்கைக்கோளை அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு நகர்த்தும் நிகழ்வு, வரும் 10ம் தேதி பிற்பகல் 02:30 மணி அளவில் திட்டமிடப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Aditya-L1 Mission:
— ISRO (@isro) September 4, 2023
The second Earth-bound maneuvre (EBN#2) is performed successfully from ISTRAC, Bengaluru.
ISTRAC/ISRO's ground stations at Mauritius, Bengaluru and Port Blair tracked the satellite during this operation.
The new orbit attained is 282 km x 40225 km.
The next… pic.twitter.com/GFdqlbNmWg
ஆதித்யா எல்1 விண்கலம்:
நிலவின் தென்துருவத்தை ஆராய சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதை தொடர்ந்து, சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம். அதன்படி, கடந்த 2ம் தேதி காலை 11.50 மணிக்கு, ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்துக் கொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாக பாய்ந்தது. பின்னர், ஆதித்யா எல்1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
வெற்றிகரமான பயணம்:
சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து லெக்ராஞ்சியன் 1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, இந்த செயற்கைக்கோள் சூரியன் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும். லெக்ராஞ்சியன் புள்ளியை அடைந்தபிறகு கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் மேற்கொள்ளும். அதன்படி, இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக முதல் 16 நாட்களுக்கு செயற்கைக்கோள் புவியை சுற்றி வந்து குறைந்தபட்ச சுற்றுவட்டப்பாதையை எட்டும். அங்கிருந்து சூரியனை நோக்கி உந்தி தள்ளபப்டும். ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வரும் 5ம் தேதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்து இருந்தது. அதன்படி, இன்று அதிகாலை விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டது.