Udhayanidhi Stalin: ’10 ரூபாய் சீப்பு இருந்தால் நானே சீவிக்கிறேன்’.. அயோத்தி சாமியாரின் அறிவிப்புக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி!
10 கோடி எதற்கு 10 ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே சீவி கொள்கிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அயோத்தி சாமியாரின் அறிவிப்புக்கு நக்கலாய் பதிலடி கொடுத்துள்ளார்.
10 கோடி எதற்கு 10 ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே சீவி கொள்கிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அயோத்தி சாமியாரின் அறிவிப்புக்கு நக்கலாய் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி, ”இனப்படுகொலை நடத்துவது பாரதிய ஜனதா கட்சிதான். மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் இனப்படுகொலையை அரங்கேற்றி வருகிறது.
விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ரமணா திரைப்படத்தில் வருவதை போன்று உயிரிழந்த 88 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளித்ததாக பாஜக அரசு ஊழல் செய்ததை CAG அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் பாசிச பாஜகவை விரட்ட வேண்டும். அதற்கு எப்படி மாநாடு அமைய வேண்டும் என்பதற்கு உதாரணமாய் சேலம் திமுக இளைஞர் அணி மாநாடு அமைய வேண்டும். கடந்த 20-ஆம் தேதி ஒரு மாநாடு (அதிமுக மாநாடு குறித்து மறைமுக விமர்சனம் ) நடைபெற்றது . தமிழ் மக்கள் பிரச்சனை குறித்து அதில் ஏதாவது ஒன்று பேசப்பட்டதா ?” என்று கேள்வி எழுப்பினார்.
மிரட்டலுக்கு பதிலடி:
தொடர்ந்து பேசிய அவர், “ஒட்டுமொத்த இந்தியாவும் தற்போது என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள் கொரோனா ஒழிப்பு போன்று, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசினேன். அதனால் அமித்ஷா, நட்டா போன்றவர்களும் என்னைப் பற்றி பேசுகிறார்கள்.
வட இந்திய சாமியார் ஒருவர் எனது தலைக்கு 10 கோடி ரூபாய் வருவதாக கூறியிருக்கிறார். சாமியரிடம் 10 கோடி ரூபாய் ஏது? அவர் டூப்ளிகேட் சாமியாரா? என சந்தேகம் எழுகிறது. 10 கோடி எதற்கு 10 ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே சீவி கொள்கிறேன். முன்னதாக, கலைஞர் தலையை சீவ ஒரு கோடி ரூபாய் தருவதாக ஒருவர் கூறினார்.. அதற்கு கலைஞர் 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் என் தலையை சீவ முடியாது என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
ஆகவே, இந்த மிரட்டுலுக்கெல்லாம் பயப்படுகிறவர்கள் நாங்கள் இல்லை. தமிழுக்காக தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த கலைஞரின் பேரன் நான். இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்.. பயப்பட மாட்டேன்.
எஜமானர் பாஜகவையும், அடிமை அதிமுகவையும் ஒழிக்க வேண்டும். 2024 தேர்தலில் தமிழகத்தின் வெற்றி இந்தியாவிற்கு வழிகாட்டியாக அமைய வேண்டும்” என குறிப்பிட்டார்.