India 75: சுதந்திரத்திற்கு பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் புள்ளி விவரங்கள்..
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிந்து கொள்வோம்.
தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்:
இந்திய மக்களுக்கு தொலை தொடர்பு வசதிகளை அளிப்பதில், இந்தியா உலக அளவில் முதல் பத்து இடங்களில் உள்ளது. இந்தியாவில் கைப்பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 83 கோடி எண்ணிக்கைக்கு மேல் உள்ளதாக India Cellular and Electronics Association தெரிவித்துள்ளது.
வேளாண் துறை:
இந்தியாவில் வேளாண் துறை மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் வேளாண்மையை சார்ந்திருக்கிறார்கள். இந்தியாவில் உணவு தானியங்களின் நிகர உற்பத்தி 1950-களில் சுமார் 48 மில்லியன் டன் என்ற அளவில் இருந்தது. ஆனால் 2021-22 ஆண்டில் 307.31 மில்லியன் டன்னாக உள்ளது. இந்த அதிகரிப்பானது 1950 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 மடங்கை விட அதிகமாகும். மேலும் அரிசி, கோதுமை மற்றும் பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில், இந்தியா தொடர்ந்து அதிகளவு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் உள்ளது.
சாலை இணைப்பு:
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்துடன்,தற்போதைய காலத்தை ஒப்பிடுகையில், இந்தியா உள்கட்டமைப்பில் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மேலும் வலுவான போக்குவரத்து உருவாக்குவதற்காக, மிகப் பெரிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. 1950-களில் சாலைகளின் நீளம் சுமார் 0.4 மில்லியன் கிலோ மீட்டர் என்ற அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது சுமார் 6.3 மில்லியன் கிலோ மீட்டருக்கு அதிகமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வர்த்தகம்:
1980-களின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட தாராளமயமாக்கல் செயல்முறை, 1990-களில் வேகம் பெற்றது. வர்த்தகத்தில் இறக்குமதி வரி போன்ற தடைகளைக் குறைத்து இந்தியப் பொருளாதாரத்தின் செயல்திறன் முடுக்கிவிடப்பட்டது. இன்று, உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க தடத்தை உருவாக்கியுள்ளது. 1950-51 ஆம் ஆண்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியின் மதிப்பு வெறும் 0.1 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, ஆனால் தற்போது, வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 400 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமாக உள்ளது. சேவைகள் ஏற்றுமதியில், தகவல் தொழில்நுட்ப சேவைகளின் ஏற்றுமதியில் இந்தியா முன்னணி இடத்திலும் உள்ளது.
எழுத்தறிவு விகிதம்:
இந்தியா சுத்திரமடைந்த போது 1950-களில் எழுத்தறிவு விகிதமானது 18.3 விழுக்காடாக இருந்தது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகளால், 1990-களில் எழுத்தறிவு விகிதமானது 52 விழுக்காடாக அதிகரித்தது. மேலும் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 73% ஆக அதிகரித்தது. சமீபத்தில், நேஷனல் சர்வே ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022-ல் இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 77.7 விழுக்காடாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறுமை:
இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறிய காலத்தில், 1950களில் வறுமைக்கு கீழ் உள்ளவர்களின் விழுக்காடு 60 விழுக்காடுக்கு அதிகமாக இருந்தது. ஆனால் அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 1980 களில் 45 விழுக்காடு என்ற அளவுக்கு குறைந்தது. ஆனால் 2019 ஆண்டின்படி இந்தியாவில் வறுமை 10.2 விழுக்காடு அளவு குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்த போது, மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த இந்தியா, அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் மக்களின் உழைப்பால் பல மடங்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனாலும், நாம் இன்னும் வளர்ச்சி அடைய வேண்டும்.