லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..
லாக்டவுன் காலத்தில் அதிக மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதால் அதிகம் கண்பாதிப்பை சந்திக்கும் நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது
லாக்டவுனில் கண்பார்வை பாதிப்புக்குள்ளாகும் இந்தியர்கள் :
கொரோனா பொது முடக்க காலத்தில் இந்தியர்கள் கண்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் மாணவர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வது, வீட்டில் இருந்தே பணிபுரிவோர் செல்போன், கணினி, மடிக்கணி ஆகிய மின்னணு சாதனங்களில் அதிக நேரம் செலவிடும் சூழல் உள்ளது.
ஊரடங்கு காலத்தில் ஆசுவாசப்படுத்திக்கொள்ள வெளியில் செல்ல முடியாது என்பதால் ஆன்லைனில் படிக்கும் மாணவர்கள் தங்கள் வகுப்பு நேரம் முடிந்த பிறகும், வீட்டில் இருந்தே பணிபுரிவோர் தங்களது வேலை நேரம் முடிந்த பிறகும் தங்களது ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சிகள் பார்ப்பது, சமுக வலைதளங்களை பயன்படுத்துவது, கேம் விளையாடுவது என மின்னணு சாதனங்களிலேயே தங்களது ஓய்வு நேரத்தையும் செலவிட்டு வருகின்றனர். திரையில் செலவிடப்படும் நேரத்திற்கும் பார்வை இழப்பு விகிதத்திற்கும் தொடர்பு உள்ளதாக இங்கிலாந்தின் feel good contact நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் உள்ள ஒளி விலகல், கண் சிவத்தல், கண் வறட்சி, கண் அரிப்பு மற்றும் கண் புண் ஆகிய பிரச்னைகளால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. lancet global health, உலக சுகாதார அமைப்பு, ஸ்டீண்டைன் ட்ராக்டர் டேட்டா ரிப்போர்ட்டல் ஆகிய தரவுகளின் அடிப்படையில் உலக அளவில் மின்னணு சாதனங்களில் செலவிடும் போது அதிகம் பேருக்கு கண்பார்வை பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் தினமும் மின்னணு சாதனங்களை உபயோகிக்கும் நபர்களின் சராசரி நேரம் 6.36 மணி நேரமாகவும் மின்னணு சாதனங்களில் செலவிடும் நபர்களில் 22.7% பேருக்கு கண்பார்வை பாதிப்பும் பதிவாகி உள்ளது . இதனால் 28 கோடி இந்தியர்களுக்கு கண்பார்வை பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்தியாவை தவிர்த்த மற்ற நாடுகளில் பாதிப்பு விகிதம்
தென்னாப்பிரிக்கா- ஒரு நபர் சராசரியாக 10.06 மணிநேரங்கள் மின்னணு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 21.6% பேருக்கு கண்பார்வை பாதிப்பு
இந்தோனேஷியா- ஒரு நபர் சராசரியாக 8.52 மணிநேரங்கள் மின்னணு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 15.5% பேருக்கு கண்பார்வை பாதிப்பு
தாய்லாந்து- ஒரு நபர் சராசரியாக 8.44 மணிநேரங்கள் மின்னணு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 15.2% பேருக்கு கண்பார்வை பாதிப்பு
வியட்நாம்- ஒரு நபர் சராசரியாக 6.47 மணிநேரங்கள் மின்னணு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 14.9% பேருக்கு கண்பார்வை பாதிப்பு
மலேஷியா- ஒரு நபர் சராசரியாக 9.17 மணிநேரங்கள் மின்னணு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 14.4% பேருக்கு கண்பார்வை பாதிப்பு
ஃபிலிப்பைன்ஸ்- ஒரு நபர் சராசரியாக 10.56 மணிநேரங்கள் மின்னணு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 14.3% பேருக்கு கண்பார்வை பாதிப்பு
சீனா- ஒரு நபர் சராசரியாக 5.22 மணிநேரங்கள் மின்னணு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 14.1% பேருக்கு கண்பார்வை பாதிப்பு
கண்களை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் என்ன?
- வைட்டமின் C, வைட்டமின் E, துத்தநாகம், ஒமேகா-3 சத்துக்கள் அடங்கிய உணவை அதிகம் எடுத்துக் கொள்வது அவசியம்
- மின்னணு திரையில் வேலை பார்த்த பிறகு ஒருமணி நேர இடைவெளிக்கு பிறகு தூங்க செல்ல வேண்டும்
- எல்லா மின்னணு சாதனங்களையும் குறைவான ஒளி உமிழ்வை கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்
- அறையை ஒளி மிகுந்ததாக மாற்றி இருட்டில் மிண்ணனு பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
- திறந்த வெளியில் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் திரையில் இருந்து பிரதிபலிப்பதால் கண்களை நேரடியாக தாக்கி கார்னியாவில் சேதத்தை ஏற்படுத்தும்
- மின்னணு திரையை மேலே பார்க்காமல் சற்று கீழே பார்க்கும் வகையில் வைக்க வேண்டும்
- 6 மாதங்களுக்கு ஒரு முறை கண் மருத்துவரை சந்தித்து கண் சோதனையை மேற்கொள்வது அவசியம்
- ஓய்வு நேரத்தில் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை குறைத்து வீட்டின் வெளியே விளையாடுவயோ, உரையாடுவதையோ வழக்கமாக்கி கொள்ளுங்கள்
- ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 அடி தூரத்தில் உள்ள எந்தவொரு பொருளையும் 20 வினாடிகளுக்கு மேல் பார்ப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள், இது கண்களின் சிரமத்தை குறைக்கும்.