காத்துவாக்குல ரெண்டு கல்யாணம்.. குடும்பம் நடத்த டைம்டேபிள் போட்ட மனைவிகள்.. அதிர்ந்த நெட்டிசன்ஸ்..
வேடிக்கை மனிதர்களின் சில வேடிக்கை நம்மை அப்படியே பிரம்மிக்க வைத்துவிடுவதும் உண்டு. அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது மத்தியப்பிரதேசத்தின் குவாலியர் நகரில்.
மனிதர்கள் சில நேரங்களில் விந்தையாக நடந்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. வேடிக்கை மனிதர்களின் சில வேடிக்கை நம்மை அப்படியே பிரம்மிக்க வைத்துவிடுவதும் உண்டு. அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது மத்தியப்பிரதேசத்தின் குவாலியர் நகரில்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் கடந்த 2018ஆம் ஆண்டு குவாலியரைச் சேர்ந்த இளம் பெண்ணை திருமணம் செய்தார். அவருடன் இரண்டு ஆண்டுகள் வசித்துள்ளார். பின்னர் கொரோனா உச்சத்தில் இருந்த வேளையில் அந்தப் பெண்ணை அவருடைய தாய் வீட்டிற்குச் செல்லும்படி கூறியுள்ளார். அந்தப் பெண்ணும் சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் ஓராண்டு ஆகியும் அந்த நபர் அப்பெண்ணை பார்க்க வரவில்லை. சரிவர பேசவும் இல்லை. கேட்கும் போதெல்லாம் தட்டிக்கழித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்தப் பெண் அவரை உடனடியாக சென்று அலுவலகத்திலேயே சந்தித்துள்ளார். அப்போது தான் அந்த நபர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சக ஊழியர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. அப்புறம் என்ன வழக்கம் போல அலுவலகத்திலேயே வைத்து கத்திக் கூப்பாடுபோட்டு நியாயம் கேட்டு சண்டையிட்டுள்ளார்.
இதில் விநோதம் என்னவென்றால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் தான். சக்காளத்தி சண்டை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படியேதும் நடக்காமல் அவர்களே ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளனர். அதன்படி திங்கள் செவ்வாய் புதன் கிழமைகளில் மூத்த மனைவி வீட்டிலும் வியாழன் வெள்ளி சனிக்கிழமைகளில் இளைய மனைவி வீட்டிலும் கணவர் வசிக்க வேண்டும். இதில் இன்னொரு ட்விஸ்டும் இருக்கு. அதென்னவென்றால் ஞாயிறு எந்த வீட்டில் இருப்பது என்பது ஹஸ்பண்ட் சாய்ஸுக்கே விட்டுவிட்டனராம்.
இப்போது அந்த சம்பந்தப்பட்ட நபர் இரண்டு மனைவிகளுக்கும் தனித்தனியாக வீடு எடுத்துக் கொடுத்துள்ளதோடு தனது சம்பாத்தியத்தை இரண்டு பேருக்கும் சரிபங்காக பிரித்துக் கொடுப்பதாகவும் சொல்லியிருக்கிறாராம். குடும்பம் நடத்த டைம்டேபிள் போட்ட சம்பவம் நகைப்பாக இருந்தாலும் கூட பரிதாபமாகவும் இருக்கிறது என்று இணையவாசிகள் கூறுகின்றனர்.
இது குறித்து குவாலியர் குடும்பநல நீதிமன்ற வழக்கறிஞர் ஹரிஷ் திவான் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தமானது சட்டப்பூர்வமானது அல்ல. மூன்று தனிநபர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம். மூவரும் இந்துக்கள் என்பதால் இந்து திருமண சட்டத்டின்படி முதல் மனைவி இறந்துவிட்டாலோ அல்லது விவாகரத்து பெற்றாலோ செய்யப்படும் இரண்டாவது திருமணமே சட்ட அங்கீகாரம் கொண்டது. ஆகையால் அந்த நபரின் இரண்டாவது திருமணத்திற்கு சட்ட அங்கீகாரமே கிடையாது என்பதுதான் உண்மை. ஆகையால் அவர்கள் சேர்ந்து வாழலாம், டைம் டேபிளும் போடலாம் ஆனால் இவை ஏதுமே சட்டப்பூர்வமானது அல்ல என்று கூறினார்.
சில சமூக செயற்பாட்டாளர்கள், பெண்கள் இன்னும் இதுபோன்ற பத்தாம்பசலித்தனங்களை அனுமதிக்கக் கூடாது எனக் கூறுகின்றனர். கணவர் முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். நியாயப்படி அந்தப் பெண் ஆவேசம் கொண்டு அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தனக்கான நீதியைப் பெற்று பின்னர் விரும்பினால் இன்னொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும். அதைவிடுத்து இவ்வாறாக டைம்டேபிள் போடுவது என்பது முட்டாள்தனம், கோழைத்தனம் என்று அவர்களுக்கு அறிவுரை கூறி இருக்கின்றனர்.