மகாராஷ்ட்ராவில் 6 நாளில் 1.8 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
மகாராஷ்ட்ராவில் கடந்த 6 நாளில் மட்டும் 1.8 லட்சம் நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டிலே அதிகளவில் கொரோனா பாதித்த மாநிலமாக மகாராஷ்ட்ரா உள்ளது. மகாராஷ்ட்ராவில் கடந்த 24-ந் தேதி மட்டும் அதிகபட்சமாக 31,855 புதிய தொற்று கண்டறியப்பட்டது. அன்றைய தினத்தில் மாநிலத்திலே அதிகபட்சமாக மும்பையில் மட்டும் 5,190 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டது. கடந்த 6 தினங்களில் மும்பையில் மட்டும் 26,765 புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன் 57 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, மாநிலம் முழுவதும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
இன்றைய நிலவரப்படி, மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தம் 2,82,451 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 6 நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் 1.8 லட்சம் நபர்களுக்கு புதியதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்காரணமாக, அந்த மாநிலத்தில் ஹோலி, புனிதவெள்ளி மற்றும் ஈஸ்டர் ஆகிய பண்டிகைகளின் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாக்பூர், நன்திட், பீட், பார்பனி மாவட்டங்களில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது.