மதிய உணவு சாப்பிட்ட 39 அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் - கும்பகோணம் மருத்துவமனையில் அனுமதி
மாணவர்களும் மாணவர்களுடைய பெற்றோர்களும் கூறிய புகாரின் அடிப்படையில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சத்துணவு ஊழியர்கள் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் மதிய உணவு சாப்பிட்ட 39 அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கண்டியூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்க கூடிய 5 முதல் 13 வயது உடைய மாணவ மாணவிகள் 39 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மாணவர்கள் மற்றும் மாணவர்களுடைய பெற்றோர்கள் கூறுகையில் எலுமிச்சை பழத்திற்கு பதிலாக நார்த்தம் பழத்தை பயன்படுத்தி சாதம் தயாரித்து கொடுத்ததாகவும், இந்த பள்ளியில் இயங்கக்கூடிய சத்துணவு கூடத்திற்கு மூன்று நாட்களாக முட்டை வரவில்லை என்றும், எனவே ஊழியர்கள் பழைய இருப்பு உள்ள முட்டையை மாணவர்களுக்கு கொடுத்ததால் தான் மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறுகின்றனர்.
இந்த நிலையில் மதிய உணவு சாப்பிட்டு கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 39 மாணவ மாணவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களுக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் ஆறுதல் கூறினார். மேலும் கண்டியூர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவினை பரிசோதனைக்காக உணவு பாதுகாப்பு துறைக்கு அனுப்பி வைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதுடன், பள்ளி மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டு விட்டு மயக்கமடைந்த இந்த விவகாரத்தில் எங்கு தவறு நடந்து இருந்தாலும் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கண்டியூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 39 மாணவ மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டு வாந்தி மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அப்பகுதியில் பெற்றோர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலச்சந்திரன் தலைமையில் விசாரணை நடத்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவர்களும் மாணவர்களுடைய பெற்றோர்களும் கூறிய புகாரின் அடிப்படையில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சத்துணவு ஊழியர்கள் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாணவர்கள் சாப்பிட்ட உணவின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கையாக சமர்ப்பித்த பின்னர் இந்த விஷயத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.