(Source: ECI/ABP News/ABP Majha)
குடிபோதையில் வாக்குப் பதிவு இயந்திரத்தை வெட்டிய நபர்
அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் ஆலங்குடி கிராமத்தில் குடிபோதையில் ஒருவர் அரிவாளால் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில், சில பகுதிகளில் அமைதியாகவும், சில பகுதியில் சண்டை சச்சரவுகள் உடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் ஆலங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, 3 மணியளவில் ஆனந்தன் என்ற நபர் குடிபோதையில் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் தகராறில் ஈடுபட்டார். உடனே இதனை தட்டிக்கேட்ட காவலர், அவரை அப்புறப்படுத்தினார். அப்போது ஆனந்தன் சிறிய கொம்பால் போலீசார் ஒருவரை தாக்கியுள்ளார்.
பின்னர், அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட அவர், மாலை எப்படி ஓட்டுப் பெட்டியை வீட்டுக்கு கொண்டு செல்வீர்கள் என்று சவால் விட்டு வீட்டுக்கு சென்றார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு காவல் அதிகாரிகள் விரைந்து சென்றனர். அதிகாரிகள் அங்கு இருக்கும்போதே, சுவர் ஏறி குதித்து மறைந்து மறுபடியும் வாக்குச்சாவடிக்கு அரிவாளுடன் வந்த ஆனந்தன், அரிவாளால் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்தார். உடனே, ஆனந்தனை கைது செய்து ஆலங்குடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையடுத்து, தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். இதன்பின்னர், மாற்றுப்பதிவு இயந்திரம் உதவியுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தால் அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.