கோவை : குளத்தில் குளித்து விளையாடிய காட்டு யானைகள் : காட்டுக்குள் அனுப்பிய வனத்துறையினரின் முயற்சி என்ன?
இரவு நேரங்களில் காட்டு யானை உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ள நிலையில், வன விலங்குகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றன.
கோவை அருகே வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானைகள் குளத்தில் குளித்து பல மணிநேரம் விளையாடின. யானைகளை பட்டாசு வீசி வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்கு விரட்டினர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் போலுவம்பட்டி வனச்சரகம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக விளங்குகிறது. இரவு நேரங்களில் காட்டு யானை உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ள நிலையில், வன விலங்குகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றன.
இந்நிலையில் செம்மேடு அருகேயுள்ள முட்டத்து வயல் என்ற குளத்தில் இரண்டு ஆண் காட்டு யானைகள் நீரில் இறங்கி விளையாடிக் கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்பகுதியில் கூடியிருந்த மக்களை உடனடியாக அப்புறப்படுத்திய வனத்துறையினர், பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரித்தனர். யானைகள் பல மணிநேரமாக குளத்தில் குளித்து விளையாடின. இரண்டு யானைகளும் அந்த குளத்தில் இருக்கும் திட்டு பகுதிக்கு செல்வதும், மீண்டும் திட்டில் இருந்து இறங்கி தண்ணீரில் குளித்துவிட்டு மீண்டும் திட்டுக்கு செல்வதுமாக இருந்தன. இப்படி தொடர்ந்து பல மணிநேரம் யானைகள் இரண்டும் விளையாடிக் கொண்டிருந்தன.
நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து இரண்டு ஆண் காட்டு யானைகள் வெளியே வந்துள்ளன. காட்டை விட்டு காட்டு யானைகள் வெளியே வர முயற்சித்தபோது, வனப் பணியாளர்கள் மீண்டும் காட்டுக்குள் பட்டாசுகளை வீசி திருப்பி அனுப்பினார்கள். இதையடுத்து வனப்பகுதிக்குள் சென்ற இரண்டு யானைகளும், தாணிகண்டி பழங்குடியின குடியிருப்பு வழியாக காப்புக் காட்டில் இருந்து வெளியே வந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் வெளியேறி குளத்திற்கு வந்துள்ளது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் யானைகளை காட்டுக்குள் அனுப்பும் நடவடிக்கைகளுக்காக, 3 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணித்து வந்தனர். மேலும் யானைகளை ட்ரோன் மூலமும் வனத்துறையினர் கண்காணித்தனர். குளத்தில் நல்ல தண்ணீர் இருப்பதால் யானைகள் குளித்து விளையாடி வருவதாகவும், குளத்தில் சகதி ஏதும் இல்லை எனவும் கூறிய வனத்துறையினர், யானைகளை பாதுகாப்பாகக் காட்டுக்குள் அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
பிற்பகலில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் வனப்பகுதிக்குள் யானைகளை விரட்ட வனத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து பட்டாசுகளை வீசியும், சத்தம் எழுப்பியும் இரண்டு யானைகளையும் குளத்தில் இருந்து வெளியேற்றினர். குளத்தில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகளும் வனப்பகுதியை நோக்கிச் சென்றன.