கோவை : மின்வேலியில் சிக்கி காட்டு யானை துடிதுடித்து உயிரிழப்பு..வனத்துறையினர் விசாரணை
சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை என்பதும், அதன் தும்பிக்கை மின் வேலியில் சிக்கி இறந்து இருப்பதும் தெரியவந்தது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் அடிவார பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. துடியலூர் அடுத்த வரப்பாளையம், பன்னிமடை பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் ஏராளமான யானைகள் இந்த பகுதி வழியாக வலசை செல்வது வழக்கம். அவ்வாறு வரும் யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்றிரவு வரப்பாளையம் கிராமத்திற்குள் மூன்று யானைகள் கொண்ட கூட்டம் புகுந்துள்ளது. இந்த யானைகள் அப்பகுதியில் உள்ள மனோகரன் என்பவரது வாழை தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. இது குறித்து மனோகரன் வனத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத் துறையினர் யானைகளை அருகில் உள்ள வனப் பகுதிக்கு விரட்டியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை மனோகரின் வாழை தோட்டத்தில் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு வந்த வனத் துறையினர். ஆய்வு மேற்கொண்டதில் உயிரிழந்தது சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பதும், அதன் தும்பிக்கை மின் வேலியில் சிக்கி இறந்து இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உதவி வன பாதுகாவலர் தினேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மின் வாரிய அதிகாரிகள், கால் நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் சம்பவ நடந்த தோட்டத்தை சுற்றிலும் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து யானை இறப்பு குறித்து தோட்ட உரிமையாளர் மனோகரனிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
வனப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுவதை தடுக்க விவசாயிகள் மின்வேலிகள் அமைத்து உள்ளன. அவ்வப்போது காட்டு யானைகள் மின்வேலியில் தொடும் போது, மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றனர். இதனைத் தடுக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தாலும், மின்சாரம் தாக்கி காட்டு யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. பெரிய தடாகம் பகுதியில் கடந்த 7 ம் தேதி உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட சுமார் 45 வயதான காட்டு யானை உடல் நலக்குறைவினால் உயிரிழந்தது. கோவை மாவட்டத்தில் கடந்த ஒரே வாரத்தில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.