ஆசிரியரால் பாலியல் தொல்லை..மறைக்கும் பள்ளி.. கடிதத்தில் 3 பெயர்கள் - கோவை மாணவி தற்கொலை : நடந்தது என்ன?
"கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பள்ளி ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி, மாணவியின் மேலாடையை கழற்றி பாலியல் தொல்லை அளித்துள்ளார்"
கோவையில் ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளான 17 வயது பள்ளி மாணவி தற்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்டு மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த போது பெற்றோர்கள் கதவு பூட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்கதாதால், சந்தேகமடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றனர். அப்போது மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் மாணவி பிணமாக தொங்கிக் கொண்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். மாணவியின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து கூறுகையில், ”மாணவி நன்றாக படிக்கக் கூடியவர். பள்ளியில் தொடர்ந்து நன்றாக படித்து வந்தார். பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போன் எண்ணை வாங்கி சாட் செய்து வந்துள்ளார். ஆசிரியர் என்ற முறையில் மாணவியும் பேசி வந்துள்ளார். ஒரு முறை பள்ளிக்கு பெற்றோர் வர தாமதம் ஏற்பட்ட போது, தனது வண்டியில் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுள்ளார்.
கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பள்ளி ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி, மாணவியின் மேலாடையை கழற்றி பாலியல் தொல்லை அளித்துள்ளார். தொடர்ந்து அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டு விடும் என மறைத்து விட்டனர். அப்பள்ளி தலைமையாசிரியர் பெற்றோரிடமும் சொல்ல வேண்டாம் என சொல்லியுள்ளார். பள்ளி நிர்வாகம் மாணவிக்கு தனியாக உளவியல் ஆலோசணையும் வழங்கியுள்ளது. கடந்த 6 மாதங்களாக மன உளைச்சல் உடன் மாணவி இருந்துள்ளார். கடந்த 6 மாதமாக அடிக்கடி வீட்டில் அழுவாள். காரணம் கேட்டாலும் சொல்ல மாட்டாள்.
மாணவி அந்த பள்ளியை பிடிக்கவில்லை எனக்கூறி இரண்டு மாதங்களுக்கு முன்பு வேறொரு தனியார் பள்ளிக்கு மாறினார். பள்ளி மாற்றத்திற்கான காரணம் குறித்து கேட்ட போது, முறையாக பதிலளிக்கவில்லை. மதுரைக்கு இடம் பெயர இருப்பதாக பள்ளியில் கூறி, மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறு பள்ளியில் சேர்த்தனர். நன்றாக படிக்கக் கூடிய மாணவி என்பதால், அப்பள்ளியில் சேர்த்துக் கொண்டனர். இருப்பினும் தொடர் மன உளைச்சலால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்” என அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை பிடித்து காவல் துறையினர் இரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். விரைவில் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவியின் தற்கொலை கடிதத்தில் ‘யாரையும் சும்மா விடக்கூடாது. ரிதாவின் தாத்தா, எலிசா சாரின் அப்பா, இந்த சார்...” என 3 பேர்களை குறிப்பிட்டுள்ளார். எதனால் மேலும் 2 பேரை மாணவி குறிப்பிட்டுள்ளார் என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050