ஓடும் ஜீப்பில் திடீர் தீ… நொடியில் உயிர் தப்பிய பெண் அதிகாரி
கோவை அருகே மாதம்பட்டி பகுதியில் அரசு ஜீப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில், அதில் பயணம் செய்த பெண் அதிகாரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் லதா. இவர் நேற்று இரவு அலுவலக பணிகளை முடித்துவிட்டு அரசு ஜீப்பில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். ஜீப்பை ஓட்டுநர் பிரபு ஓட்டி வந்தார். அவர்கள் மாதம்பட்டி அருகே Siruvani Road வழியாக செல்லப்ப கவுண்டன்புதூர் பிரிவு அருகே சென்றபோது, ஜீப்பின் முன்பகுதியில் உள்ள இஞ்சின் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேற தொடங்கியது.
அரசு ஜீப்பில் திடீர் தீ விபத்து
இதனை கவனித்த ஓட்டுநர் உடனடியாக சுதாரித்து சாலையோரமாக ஜீப்பை நிறுத்தினார். உடனே வட்டார வளர்ச்சி அலுவலர் லதாவும், ஓட்டுநர் பிரபுவும் வாகனத்திலிருந்து கீழே இறங்கினர். அவர்கள் இறங்கிய சில நொடிகளிலேயே ஜீப்பின் முன்பகுதியில் திடீரென தீப்பற்றிக் கொண்டு மளமளவென எரிய தொடங்கியது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீர் பீச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், ஜீப்பின் முன்பகுதி பெரிதும் சேதமடைந்தது. மின் கசிவு காரணமாக இஞ்சின் பகுதியில் தீப்பற்றியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படாதது நிம்மதியை அளித்துள்ளது. திடீர் தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















