பொள்ளாச்சியில் கோயில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: இருவர் உயிரிழப்பு ; 3 பேர் படுகாயம்
கோயில் அருகே மழையில் நனையாமல் இருக்க ஒதுங்கி நின்றனர். அப்போது திடீரென கோயிலின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் கோயில் அருகே நின்றுகொண்டு இருந்த 5 பேரும் சிக்கினார்கள்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில், கடந்த மாதத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. கோவை மாநகர் பகுதிகளில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு தொடர் மழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள காளிபுரம் எட்டித்துறை பகுதியில் புத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த நிலையில் அந்தப்பகுதியில் கன மழை பெய்தது. இதனால் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான நடராஜ் (வயது 50), முருகன் என்பவரின் மகன் ஹரி (13), பிரபு (35) நித்திஷ் (11) மற்றும் நிர்மல் (14) ஆகியோர் கோவில் அருகே மழையில் நனையாமல் இருக்க ஒதுங்கி நின்றனர். அப்போது திடீரென கோயிலின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் கோயில் அருகே நின்றுகொண்டு இருந்த 5 பேரும் சிக்கினார்கள்.
இதில் வேட்டைக்காரன் புதூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த ஹரி (13) தலையில் பலத்த காயம் ஏற்பட்டும், நடராஜ் என்பவர் மண்ணில் புதைந்தும் உயிரிழந்தனர். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் சுவரின் இடிப்பாடுக்குள் சிக்கிய 5 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் அவர்கள் ஆனைமலை காவல துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இடுபாடுகளில் இருந்து இருவரது உடல்களும் மீட்கப்பட்டன. இதையடுத்து உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டன. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஒருவரும், வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனையில் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஆனைமலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் சுவர் இடிந்து இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், ஆனைமலை தாசில்தார் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்தில் பார்வையிட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்