பூங்காவில் விளையாடிய 2 குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - கோவையில் அதிர்ச்சி
பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்கிறது. தொடர்ந்து சில தினங்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. கோவை சின்னவேடம்பட்டி - துடியலூர் சாலையில் ஏ.டபுள்யு.எச்.ஓ. ராமன் விகார் என்ற இந்திய ராணுவ வீட்டு வசதி வாரியத்தால் கட்டி விற்பனை செய்த அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புகளில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்குள்ள பூங்காவில் நேற்று மாலை 6.45 மணி அளவில் அங்கு வசிக்கும் பிரசாந்த் ரெட்டி என்பவரின் மகன் ஜியான்ஸ் ரெட்டி (வயது 6), பாலசந்தர் என்பவரின் மகள் வியோமா பிரியா (8) மற்றும் சில குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். எல்.கே.ஜி. படிக்கும் ஜியான்ஸ் ரெட்டியும், மூன்றாம் வகுப்பும் படிக்கும் வியோமா பிரியாவும் சறுக்கில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர்.
பூங்காவில் சறுக்கில் விளையாடி கொண்டிருந்த வியோமா பிரியா மற்றும் ஜியான்ஸ் ரெட்டி ஆகிய இருவரையும், எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் இருவரும் மயக்கம் அடைந்து அங்கேயே விழுந்தனர். இதையடுத்து அங்கிருந்த குழந்தைகள் ஓடி சென்று அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக ஓடி வந்து மயங்கி கிடந்த ஜியான்ஸ் ரெட்டி மற்றும் வியோமா பிரியா ஆகிய இருவரையும் தூக்கி கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகள் இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் சரவணம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விசாரணை நடத்தினர். மேலும் குழந்தைகளின் உடல்களை கைப்பற்ற உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.