TTF VASAN : ’எனக்கு யாரை பார்த்தும் பயம் கிடையாது' - நியூஸ் சேனல்கள் சாடிய டிடிஎப் வாசன்
"பொறுத்து பொறுத்து போறேன். பொறுமைக்கு ஒரு எல்லை வரை தான். டிடிஎப் பவர் தெரியாமல் நியூஸ் சேனல் விளையாடிட்டு இருக்கீங்க. அப்படினு கேட்கத் தோணுது. ஆனா நான் அப்படி கேட்கமாட்டேன்."
Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த மரக்கடை அதிபரும், பிரபல யூட்யூபருமான ஜி.பி.முத்துவை பைக்கில் அமர வைத்து அதிவேகமாக ஓட்டியுள்ளார். வாகன நெருக்கடி நிறைந்த கோவை - பாலக்காடு சாலையில் 150 கி.மீ.க்கு மேலான வேகத்தில் செல்லும் டிடிஎப் வாசன், ஜி.பி.முத்துவுக்கு மரண பயத்தை காட்டி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து டிடிஎப் வாசன் மீது போத்தனூர் மற்றும் சூலூர் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே போத்தனூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டிடிஎப் வாசன் மதுக்கரை நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்னிலையில் சரணடைந்தார். காலை 10.30 மணிக்கு சரணடைந்த வாசன், மாலை 5.30 மணி வரை நீதிமன்ற கூண்டில் அமர வைக்கப்பட்டிருந்தார். பின்னர் இரண்டு நபர் உத்தரவாதம் அளித்த பின் மாலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக கடந்த ஒரு வார காலமாக அமைதி காத்த டிடிஎப் வாசன் இன்று தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “இந்த பிரச்சனை வேகமாக சென்றதால் இல்லை. மீட் அப் வைத்த போது கூடிய மக்கள் கூட்டம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. செய்தி சேனல்கள் பழைய வீடியோக்களை எடுத்து போட்டு சர்ச்சை ஆக்கினார்கள். எல்லாம் நியூஸ் சேனல் ஆரம்பித்ததுதான். வேகமாக செல்வதை குறைத்துக் கொண்டுள்ளேன். 150 கி.மீ. வேகத்தில் சென்றது தப்பு தான். ஆனால் டிரெண்டிங்கில் முதலிடத்திற்கு வந்ததால், அதை பெரிய விஷயமாக்கி இவ்வளவு பெரிய பிரச்சனையை இழுத்திட்டு வந்துட்டாங்க.
தயவுசெய்து இப்படி ஒருத்தன் வாழ்க்கையை அழிக்காதீர்கள். என்மேல 5 வழக்குகள் போட்டுள்ளார்கள். மனம் புண்பட்டது. ஒரு கட்டத்துக்கு மேல நடப்பது நடக்கட்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன். எவ்வளவு தான் குனி குருகிப் போனது? தமிழ்நாடு - லண்டன் போகும் கனவில் மண்ணை போட்டு விட்டார்கள். வாசன் போலீசை மிரட்டியதாக நியூஸ் சேனல் பொய் செய்தி போட்டுள்ளார்கள். ஏன் இப்படி பொய் செய்தி பரப்புகிறீர்கள்? வாழ்க்கையை அழிக்கிறார்கள். எனக்கு பின்னால் கடின உழைப்பு இருக்கிறது. மறுபடியும் வழக்கு போடணும் என நியூஸ் சேனல் நினைக்கிறார்கள்.
பொறுத்து பொறுத்து போறேன். பொறுமைக்கு ஒரு எல்லை வரை தான். டிடிஎப் பவர் தெரியாமல் நியூஸ் சேனல் விளையாடிட்டு இருக்கீங்க. அப்படினு கேட்கத் தோணுது. ஆனா நான் அப்படி கேட்கமாட்டேன். சுமுகமாக போய் விடலாம் என நினைக்கிறேன். நியூஸ் சேனலை பார்த்து பயம் கிடையாது. எனக்கு யாரை பார்த்தும் பயம் கிடையாது. எல்லாத்துக்கும் ஒரு எல்லை உள்ளது. நீங்கள் எல்லையை கடந்து போயிட்டு இருக்கீங்க.
அதுக்கும் மேல நாங்க எல்லா யூடுப்பர்ஸ் சேர்ந்து நியூஸ் சேனல் பாத்தி பேச வேண்டி வந்திரும். ஒரு லிமிட்டோடு இருந்து கொள்ளுங்கள். இதுக்கு மேல் பொய் செய்திகளை பரப்பிட்டு இருக்காதீங்க. மிரட்டுறீயானு கேட்ட, மிரட்டல் எல்லாம் கிடையாது. யூடுபர்ஸ் பார்த்து பத்திரமா இருங்கள். காவல் துறைக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நியூஸ் சேனல் கொளுத்தி போடுவது தான் பிரச்சனை. காவல் துறை மீது மதிப்பு வைத்துள்ளேன். மனசுக்குள் கஷ்டம் இருந்தாலும் காட்டிக் கொள்ள கூடாது. இந்த இடத்தில் இருந்து கீழே இறக்கி விட முயற்சிப்பார்கள். விட்டுக்கொடுத்து விடக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்