கோவையில் பேருந்து, கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட வழக்கு - 3 பேர் கைது
இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி கண்ணாடியை உடைத்து தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள மாருதி என்ற துணிக்கடை, காந்திபுரம் பகுதியில் பாஜக நிர்வாகி மோகன் என்பவரது கடை, மேட்டுப்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடை, கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் மற்றும் குனியமுத்தூர் பகுதியில் பாஜகவை சேர்ந்த தியாகு ஆகியோரது வீடுகள் என மொத்தம் 6 இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதேபோல பொள்ளாச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக பதட்டமான சூழல் நிலவியது.
இதனிடையே கடந்த 22ம் தேதியன்று கணபதி பகுதியில் இருந்து கோவைப்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. புட்டுவிக்கி சாலை சந்திப்பில் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி கண்ணாடியை உடைத்து தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் சாட்சியங்கள் மற்றும் தொழில்நுட்ப விபரங்களின் அடிப்படையில் கரும்புக்கடை பகுதியை சேர்ந்த முகமது ஷாரூக், முகமது இத்ரிஸ் ஆகிய இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவத்திற்லு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதேபோல கடந்த 23ம் தேதியன்று குனியமுத்தூர் பகுதியில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தியாகு என்பவரின் கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த ஜேசுராஜ், இலியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட அம்ரிஷ்கான் என்பவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் மற்றும் பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகளின் தடை காரணமாக கோவை மாநகரில் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாநகரில் பதட்டம் மிகுந்த பகுதிகளில் ஒரு காவல் நிலையத்திற்கு ஒரு காவல் கண்காணிப்பாளர் என்ற அடிப்படையில் 6 காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கோவை நகரில் உள்ள காவல் துறையினருடன் வெளி மாவட்டங்களில் இருந்தும் காவலர்கள் பாதுகாப்பிற்காக கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு காவல் படையினர், தமிழ்நாடு காமாண்டோ போலீசார், அதிவிரைவுப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மொத்தமாக கோவை மாநகர காவலர்கள் மற்றும் வெளிமாவட்ட காவலர்கள் என மொத்தம் 4000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். கோவை நகருக்குள் நுழையும் வழியில் 11 சோதனை சாவடிகள் தவிர, கூடுதலாக நகரில் 28 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. ஒரு காவல் நிலையத்திற்கு 3 ரோந்து வாகனங்கள் வீதம் 15 காவல் நிலையத்திற்கு 45 ரோந்து வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்