இரிடியம் மோசடி குறித்து புகாரளித்தவரை மிரட்டிய 3 பேர் கைது ; விசாரணை வளையத்தில் ராக்கெட் ராஜா
இந்த வழக்கில் பின்புலமாக திருநெல்வேலியை சேர்ந்த ராக்கெட் ராஜா என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரையும் இந்த வழக்கில் சேர்த்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் பெரோஸ்கான். இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் சீனா பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடையும் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக கோவை குனியமுத்தூர் பகுதியில் வீடு உள்ளது. கடந்த மாதம் இவரது குனியமுத்தூர் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக 4 கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர். இது தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த சிராஜுதீன் என்பவர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் கடந்த 2013ம் ஆண்டு முதல் தன்னிடம் 3.92 கோடி ரூபாய் பணம் வாங்கி விட்டு மோசடி செய்து இருப்பதாக பெரோஸ்கான் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது புகார் அளித்தார். தமிழகத்தில் தனக்கு இரிடியம் விற்பனை செய்வதற்கு DRDA அனுமதி வழங்கியிருப்பதாக போலியான ஆவணங்களை காட்டி தன்னை ஏமாற்றியதுடன் பணத்தை வாங்கி விட்டு மோசடி செய்திருப்பதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். பெரோஸ்கான் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அவரது வீட்டிற்க்கு சென்ற போது துப்பாக்கியை எடுத்துக் காட்டி பணத்தைக் கேட்டு வீட்டுக்கு வந்தால் உயிரோடு விடமாட்டேன் என மிரட்டியதாகவும், பெரோஸ்கானிடமும் அசுரப்கானிடமும் பணத்தைக் கேட்கக் கூடாது என தொடரும் மிரட்டல்கள் வந்ததாகவும், ஒருமுறை ராக்கெட் ராஜாவின் கூட்டாளி பேசுவதாகவும் கூறி தன்னை மிரட்டியதாகவும் அந்த புகாரில் தெரிவித்து இருந்தார். அஸ்ரப் கான் மீது ஏற்கனவே கேரளாவில் பலரை ஏமாற்றியது தொடர்பாக வழக்குகள் இருப்பதாகவும், இந்நிலையில் பெரோஸ்கான் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்து நான்கு ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் வந்ததை பார்த்து காவல் நிலையத்தில் புகாரளித்தாகவும் சிராஜூதீன் தெரிவித்திருந்தார்.
பணம் பறிமுதல்
சிராஜுதீன் அளித்த புகாரின் பேரில் பெரோஸ்கான், கேரள மாநிலத்தை சேர்ந்த அஷ்ரப் கான், பெரோஸ்கானின் மனைவி சாலியா பேபி, அஜய், ஷாஜி, ஸ்ரீதர் என ஆறு பேர் மீது மூன்று பிரிவுகளில் குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மோசடி, கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பெரோஸ்கானுக்கு சம்மன் அனுப்பினர்.
ஆனால் சம்மனை ஏற்று பெரொஸ்கான் குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு வராத சூழலில் அவரது தொலைபேசி எண்ணை காவல் துறையினர் கண்காணித்தனர். அப்போது பெரோஸ்கான் அடிக்கடி நெல்லையைச் சேர்ந்த பொன் முருகானந்தம் என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து தனிப்படை அமைத்து பொன் முருகானந்தத்தை கண்காணித்து வந்த நிலையில், உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி டோல்கேட்டில் வைத்து பொன் முருகானந்தம் , டிரைவர் பாலாஜி, ராஜநாராயணன் ஆகிய மூன்று பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் பணத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து பொன் முருகானந்தம் உள்ளிட்ட மூவரையும் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்த போது, பொன் முருகானந்தம் பெரோஸ்கானுக்கு ரியல் எஸ்டேட் தொழில் மூலம் அறிமுகமானதாகவும், பெரோஸ்கானுக்கு வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய 4 கோடி ரூபாய் பணத்தை மீட்டுக் கொடுக்கவும், சிராஜூதீனிடம் பஞ்சாயத்து பேசி வழக்கை வாபஸ் பெறவும் 20 லட்ச ரூபாய் பணத்தை பெற்று வந்ததும் தெரியவந்தது. இந்த வழக்கில் பின்புலமாக திருநெல்வேலியை சேர்ந்த ராக்கெட் ராஜா என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரையும் இந்த வழக்கில் சேர்த்துள்ள காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட பொன் முருகானந்தம், பாலாஜி, ராஜநாராயணன் ஆகிய மூன்று பேரையும் நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிபதி ஜாமினில் விடுவித்தார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் பெரோஸ்கான் மற்றும் அவரது கூட்டாளிகள் ஏழு பேரையும் பிடித்து விசாரணை மேற்கொள்ள குனியமுத்தூர் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.