காவி நிற திருவள்ளுவர் படத்துடன் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் ; கோவை ஆட்சியர் விளக்கம்
கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற திருக்குறள் திரள் வாசிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு காவி நிற திருவள்ளுவர் படம் கொண்ட திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
![காவி நிற திருவள்ளுவர் படத்துடன் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் ; கோவை ஆட்சியர் விளக்கம் Thirukkural book with saffron colored picture of Thiruvalluvar was given to students causing controversy in Coimbatore காவி நிற திருவள்ளுவர் படத்துடன் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் ; கோவை ஆட்சியர் விளக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/28/18db913a21c7f2c724daf29f7328d8961658997575_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை கொடிசியா வளாகத்தில் கோயமுத்தூர் 6வது புத்தகத் திருவிழா நடைபெற்று வருகின்றது. கடந்த 22 ம் தேதி துவங்கிய இந்த புத்தகத் திருவிழா வருகின்ற 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் நாள்தோறும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக புத்தகத் திருவிழாவின் 7வது நாளான இன்று பள்ளி மாணவ, மாணவியர்கள் 5 ஆயிரம் பேர் ’திருக்குறள் திரள் வாசிப்பு' நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாநகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 5000 பேர் கொடிசியா ஹாலில் அமர வைக்கப்பட்டனர். திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தில் இருந்தும் 2 குறள்கள் என 20 குறள்களை அனைத்து மாணவ, மாணவிகளும் திரளாக வாசித்தனர். திருக்குறள்களை மாணவ, மாணவிகள் ஒரே குரலில் சொல்ல, சொல்ல ஆசிரியர் திருக்குறளுக்கு விளக்கம் அளித்தனர். மாணவர்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கு விக்கும் விதமாக திருக்குறள் திரள் வாசிப்பு நிகழ்ச்சியானது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த திருக்குறள் திரள் வாசிப்பில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் தமிழறிஞர்கள், புத்தக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே திரள் வாசிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா அமைப்பு சார்பில் திருக்குறள் தெளிவுரை புத்தகம் வழங்கப்பட்டது. அந்த புத்தகத்தின் அட்டைப் படத்தில் திருவள்ளுவர் படம் காவி நிறத்தில் இடம் பெற்றிருந்தது. வழக்கமாக வெள்ளை நிறத்தில் உள்ள திருவள்ளுவர் படங்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், காவி நிறத்தில் திருவள்ளுவர் படம் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”புத்தகத் திருவிழாவில் 250 க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. புத்தகத் திருவிழாவில் சிறப்பான நிகழ்வுகள் தினமும் நடத்தப்படுகின்றது. திருக்குறள் திரள் வாசிப்பு இன்று சிறப்பாக நடந்தது. 5000 மாணவர்கள் 20 குறள்களை ஒரே குரலில் படித்தார்கள். ஒரே குரலில படிக்கும் போது மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த திருக்குறள் திரள் வாசிப்பு இருக்கும். மாணவர்களிடம் வாசிப்புத் திறனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாணவர்கள் புத்தகத் திருவிழாவை பார்வையிடவும், ஒரு புத்தகம் வாங்கி வாசிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
காவி நிறத்தில் திருவள்ளுவர் படம் இருப்பது குறித்த கேள்விக்கு, ”அது தவறான கருத்து. அது பார்வை குழப்பம் என்று சொல்லலாம். திருக்குறள் புத்தகத்தின் சட்டை நிறத்தை பார்க்கவில்லை. அதில் உள்ளே என்ன இருக்கின்றது என்று தான் பார்க்கின்றேன்” எனப் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், ”அட்டுக்கல் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது. சமூக நலத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். உரிமை மீறல் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Chess Olympiad 2022 LIVE: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வீரர்கள் பேருந்தில் பயணம்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)