பொள்ளாச்சி: போக்சோ சட்டத்தில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்
போக்சோ சட்டத்தில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்கள் மீதான வழக்கை இரத்து செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இரண்டு பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அப்பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அப்பள்ளியில் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த தாவரவியல் ஆசிரியர் பாலச்சந்திரன் (43) மற்றும் கோவை சிட்ரா பகுதியைச் சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் (46) ஆகியோர் பள்ளியில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் அப்பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரிடம், இருவரும் கடந்த ஒரு வருடமாக அடிக்கடி தவறாக நடந்து கொண்டதோடு, இரட்டை அர்த்த வார்த்தைகளில் பேசியதாகவும் இருவரும் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆசிரியர்களின் தொல்லையால் மனமுடைந்த மாணவி சைல்டு லைனில் புகார் அளித்தார். பின்னர் குழந்தைகள் நலக்குழு மூலம் மாணவி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். குழந்தைகள் நலக்குழுவினர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர்கள் பாலச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் கடந்த 29ம் தேதியன்று போக்சோ சட்டத்தின் கீழ் கோட்டூர் காவல் துறையினர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் சமத்தூர் -தேவனூர் புதூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்சோ சட்டத்தில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்கள் மீதான வழக்கை இரத்து செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இது குறித்து மாணவ, மாணவியர் கூறியதாவது, ”எங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மீது எந்த தவறும் கிடையாது. அவர்கள் மீது முறையான விசாரணை மாவட்ட ஆட்சியர் செய்ய வேண்டும் மற்றும் பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து விசாரணை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர். இதையடுத்து வந்த காவல் துறையினர் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனக் கூறி மாணவர்களை சமரசப்படுத்தினர். பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, வகுப்பறைகளுக்கு சென்றனர். இதனால் சமத்தூர் - தேவனூர் புதூர் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்