கோவை கிணத்துக்கடவு அருகே நீட் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்த மாணவர் கீர்த்திவாசன் தற்கொலை
’’இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில், மூன்றாவது முறையாக தேர்வெழுதி முடிவுகளுக்காக கீர்த்திவாசன் காத்திருந்தார்’’
![கோவை கிணத்துக்கடவு அருகே நீட் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்த மாணவர் கீர்த்திவாசன் தற்கொலை Student Keerthivasan commits suicide while writing NEET exam and waiting for result கோவை கிணத்துக்கடவு அருகே நீட் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்த மாணவர் கீர்த்திவாசன் தற்கொலை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/30/0f708364d6f757e9a6a903a3647a78b6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை அருகே நீட் தேர்வில் தொடர் தோல்வியால் மனமுடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சங்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. விவசாயியான இவருக்கு 20 வயதில் கீர்த்திவாசன் என்ற மகன் இருந்தார். கீர்த்திவாசன் கடந்த 2018 ஆம் ஆண்டில் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றார். இதையடுத்து மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில் நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார். 2019 ஆம் ஆண்டில் முதல் முறையாக கீர்த்திவாசன் நீட் தேர்வு எழுதிய நிலையில், அத்தேர்வில் தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து ஒராண்டு மீண்டும் படித்து 2020ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக கீர்த்தி வாசன் நீட் தேர்வு எழுதினார். இந்த தேர்விலும் அவர் மீண்டும் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்தார்.
இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த கீர்த்திவாசன், மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத படித்து வந்தார். இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் மூன்றாவது முறையாக அத்தேர்வு எழுதினார். நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், அத்தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்தார். இதனிடையே தொடர்ந்து 2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் கீர்த்திவாசன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். மூன்றாவது முறையும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்திலும், இத்தேர்விலும் தோல்வி அடைந்தால் மீண்டும் தேர்வு எழுத முடியாது என்ற அச்சத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனமுடைந்த கீர்த்திவாசன் நேற்று மதியம் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து தெரியவந்ததை அடுத்து கீர்த்திவாசனை அவரது குடும்பத்தினர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து கீர்த்திவாசன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் கீர்த்திவாசன் உயிரிழந்தார்.
இது குறித்து கீர்த்திவாசனின் தந்தை குப்புசாமி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கீர்த்திவாசனின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தொடர் தோல்வியால் மனமுடைந்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)