NEET Exam: நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை - வெளியான மாணவி எழுதிய உருக்கமான கடிதம்..!
“அம்மா, அப்பா எல்லாரும் என்ன மன்னிச்சுடுங்க. நீட்ல மார்க் போனதுல இருந்து என்னால நிம்மதியா இருக்க முடியல. வெலிய சந்தோஷமா இருக்க மாதிரி நடிச்சிட்டு இருக்கேன். என்னால சத்தியமா முடியல."
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி, பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் அருளானந்தம். இவரது 17 வயது மகள் ஜெயா 12ஆம் வகுப்பு முடித்த நிலையில் இந்த கல்வியாண்டிற்கான நீட் தேர்வை எழுதி இருக்கிறார். கடந்த நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நீட் தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறார். இதன் காரணமாக மாணவி தொடர்ந்து மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. மனைவியின் நிலையை கண்ட அவரது பெற்றோர்கள் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மாணவியை அனுப்பி இருக்கிறார்கள். அங்கும் மாணவி தொடர்ந்து மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு திருப்பூரில் இருந்து மாணவி கூடலூருக்கு வந்திருக்கிறார். கடந்த 18 ஆம் தேதி கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவருக்கு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாணவி உயிரிழந்தார். தற்சமயம் மாணவி தற்கொலைக்கு காரணமாக கூறி எழுதி வைத்த கடிதத்தை காவல் துறையினர் கைப்பற்றி இருக்கிறார்கள்.
அந்த கடிதத்தில், “அம்மா, அப்பா எல்லாரும் என்ன மன்னிச்சுடுங்க. நீட்ல மார்க் போனதுல இருந்து என்னால நிம்மதியா இருக்க முடியல. வெளிய சந்தோஷமா இருக்க மாதிரி நடிச்சிட்டு இருக்கேன். என்னால சத்தியமா முடியல. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. நா தீபாவளிக்கு இங்க வரும்போதே இருக்க கூடாதுனு நினைச்சு தான் வந்தேன். அப்புறம் எல்லாரையும் பார்த்து கொஞ்சம் மனச மாத்திக்கிட்டேன். அப்புறம் பாராமெடிக்கல் அட்மிசன் போட்டேன். இது சரி கிடைக்குமானு பார்க்கலானு அப்புறம் தான் திரும்ப திருப்பூர் போனேன். அங்க போய்ட்டும் எனக்கு நீட் தேர்வுல மார்க் போய்டுசேனு மனசு ரொம்ப கஷ்டமாவே இருந்துச்சு. என்னால வேலை செய்யவும் முடியல. சாப்பிடவும் முடியல. எல்லாத்தையும் இழந்துட்ட மாதிரியே தோணுச்சு. ஏன் உயிரோட இருக்கேனு இருந்துச்சு
வேலையை விட்டு இங்க வந்தேன். எனக்கு பைத்தியமே புடிக்கிற மாதிரி இருக்கு. இத நினேச்சே எனக்கு திரும்ப உடம்பு சரியில்லாம போனா திரும்ப நீங்க தான் கஷ்டப்படனும்னு தான் அம்மா நா இப்படி ஒரு முடிவெடுத்தேன். என்ன பத்தி யாரும் கவலபடாதீங்க அம்மா. என்னை மன்னிச்சிடுங்க எல்லாரும்....” என நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டு இருக்கிறார். இது குறித்து கூடலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050