கோவையில் 25ஆவது நாளாக தொடரும் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
விசைத்தறி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 25 வது நாளை எட்டியுள்ளது. இதன் காரணமாக கோவை திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு லட்சம் விசைத்தறி கூடங்கள் இயக்கப்படாமல் உள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து நூலை வாங்கி கூலி அடிப்படையில் துணியாக நெசவு செய்து தருகின்றனர். இதற்காக 3 வருடங்களுக்கு ஒருமுறை ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு வழங்குவது வழக்கம். ஆனால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக கூலி வழங்கவில்லை. இதனையடுத்து கூலி உயர்வு வழங்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் தமிழக அமைச்சர்கள் மற்றும் கோவை திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் விசைத்தறி உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதமும் பல்லடம் மற்றும் இதர ரகங்களுக்கு 20 சதவீதமும் கூலி உயர்வு வழங்குவது என ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த கூலி உயர்வு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்கததால் கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் விசைத்தறிக் கூடங்களை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 25 வது நாளை எட்டியுள்ளது. இதன் காரணமாக கோவை திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு லட்சம் விசைத்தறி கூடங்கள் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் இதனை நம்பி உள்ள ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விசைத்தறி உரிமையாளர்களுக்கும் இடையே தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் கூலி உயர்வு வழங்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், விசைத்தறி உரிமையாளர்கள் இன்று விசைத்தறி கூடங்களிலும், வீடுகளிலும் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் சோமனூர் பகுதி தலைவர் பழனிச்சாமி கூறுகையில், ”மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கூலி உயர்வுக்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் ஜவுளி உறுபத்தியாளர்கள் தங்களுக்கு கூலி உயர்வு வழங்காததால் 25 நாட்களாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களிலும் விசைத்தறி தொழிலாளர்கள் வீடுகளிலும் கருப்பு கொடி கட்டப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 1.25 கோடி மீட்டர் துணி உற்பத்தியும், நாளொன்றுக்கு 60 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது” என அவர் தெரிவித்தார். இதனிடையே விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், கோவை தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விசைத்தறி உரிமையாளர்களுக்கு இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.