Tasmac : டாஸ்மாக் கடையில் கட்சி நிதி கேட்டு வாக்குவாதம் ; ஆர்.எஸ்.பி. கட்சி நிர்வாகி மீது வழக்குப்பதிவு..
புரட்சிகர சோசலிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி எனவும், கட்சி நிதியாக 500 ரூபாய் கொடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு ராஜகோபால் மறுப்பு தெரிவிக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கோவையில் டாஸ்மாக் கடையில் கட்சி நிதி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆர்.எஸ்.பி. கட்சி நிர்வாகி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை அவிநாசி சாலையில் விமான நிலையம் அருகே ஒரு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் காளப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று ராஜகோபால் பணியில் இருந்தபோது, அந்த கடைக்கு வந்த ஒரு நபர் தன்னை ஆர்.எஸ்.பி என்ற புரட்சிகர சோசலிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி எனவும், கட்சி நிதியாக 500 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு ராஜகோபால் மறுப்பு தெரிவிக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அந்தப் பகுதியில் இருந்த ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில் கடை விற்பனையாளர், “நீங்க யாரு? எதுக்கு பணம் கொடுக்கணும்?” எனக் கேட்க, அந்த நபர் “கட்சி நிதி” எனக் கூறியுள்ளார். பின்னர் “எந்த கட்சி? எத்தனை பேர் இருக்கிறீர்கள்? எத்தனை பேர் வந்துள்ளீர்கள்?” என கேட்டபோது, ”ஒரிடத்திற்கு 50 பேரா வருவார்கள்?” என்கிறார். ”ஆளாளுக்கு வந்து கேட்டால் எடுத்து கொடுக்கணுமா? 500, 1000 கொடுக்க என் அப்பா விட்டு கடையா?” என விற்பனையாளர் கேட்டபோது, “இப்படி கேட்கிறார்கள் என புகார் கொடுங்கள்” என அந்நபர் கூறியுள்ளார்.
“மிரட்டல், உருட்டல் வேலை எல்லாம் என்னிடம் வேண்டாம். உங்களை போன்ற லட்சம் தொழிலாளர்களை பார்க்கிறவன் நான்” என அந்நபர் கூற, “நானும் எல்லாரையும் பார்த்திட்டுதான் வந்திருக்கிறேன்” என விற்பனையாளர் பதிலுக்கு கூறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் மாறி மாறி வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் வீடியோ எடுத்தவர் எந்த கட்சி என கேட்டபோது, “ஆர்.எஸ்.பி” என பதிலளித்துள்ளார்.
ஆர்.எஸ்.பி. கட்சி நிர்வாகி டாஸ்மாக் கடைக்கு வந்து கட்சி நிதியாக 500 ரூபாய் கேட்டு இழிவான வார்த்தைகளில் பேசி, மிரட்டல் விடுத்ததாக டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் ராஜகோபால் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில் பேரில் ரத்தினபுரி பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.பி. என்ற புரட்சிகர சோசலிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியான பாஸ்கரன் என்பவர் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஸ்கரன் மீது ஏற்கனவே 2019-ஆம் ஆநாடாளுமன்ற தேர்தலிலின்போது வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கட்சியில் கட்சி நிதி கேட்டு தகராறு செய்தது தொடர்பாக வழக்கு நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்