கோவையில் சிலிண்டர் வெடித்ததில் வெடித்து சிதறிய கார் ; ஒருவர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறி இருப்பது தெரியவந்தது.
கோவையில் கார் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் முன்பாக இன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதையடுத்து காரில் தீப்பற்றி மளமளவென பரவி தீப்பற்றி எரிந்தது. கார் முழுவதும் தீயில் கருகியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறி இருப்பது தெரியவந்தது. காரின் பதிவு எண் பொள்ளாச்சி முகவரியில் இருப்பதால், அந்த முகவரி குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதிக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது.
சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது எனவும், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நடந்து இருப்பதால் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். சம்பவ இடத்தில் காவல் துறை உயரதிகாரிகள் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். உயிரிழந்த நபர் யார் என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்