பீர் குடித்த இளைஞர் உயிரிழப்பு ; காரணம் என்ன?
பீர் அருந்திய வாலிபர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் காளான் சாப்பிட்டு பீர் அருந்திய வாலிபர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் சதீஷ். 21 வயதான இவர் டிப்ளமோ படித்து உள்ளார். இவர் கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன் பாளையம் அருகே உள்ள காளியம்மாள் காலனியில் தங்கியிருந்து, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடன் நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவதினேஷ் என்பவரும் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில், சம்பத்தன்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற சதீஷ், பீர் வாங்கி அருந்தினார். அப்போது அவர் சைட் டிஸ்சாக காளான் ப்ரை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து கழிவறை சென்று திரும்பிய சதீஷ் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து சரிந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவ தினேஷ் உடனே தனியார் நிறுவன சூப்பர்வைசருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சதீசை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சதீஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து துடியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவர் பீருடன் காளான் ப்ரை சாப்பிட்ட போது புரையேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியானாரா? அல்லது அவருக்கு வேறு ஏதேனும் உடல் நலப்பாதிப்பு இருந்ததா? என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காளானுடன் பீர் அருந்திய வாலிபர் பலியான சம்பவம் அவரது நண்பர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.