மேற்கு மாவட்டங்களில் கவனிக்க வேண்டிய முக்கியச் செய்திகள்
நீட் தேர்வினால் மனமுடைந்து மாணவர் தற்கொலை, சூடு பிடிக்கும் கோடநாடு வழக்கு, யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு உள்ளிட்ட முக்கியச் செய்திகள் இதோ...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கீர்த்திவாசன் என்ற மாணவர் நீட் தேர்வினால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. காவல் துறையினரின் கூடுதல் விசாரணைக்கு கால அவகாசம் அரசு தரப்பில் கேட்கப்பட்டதால், அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்தாக கைது செய்யப்பட்ட ரமேஷை 5 நாட்கள் காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா அனுமதி அளித்து உத்தரவிட்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதாரர் தனபாலை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ரமேஷை விசாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள அட்டுக்கல் வனப்பகுதியில் வெள்ளிங்கிரி என்ற 70 வயது முதியவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். வனப்பகுதிக்குள் சீமார் புல் சேகரிக்க சென்ற போது, எதிர்பாராத விதமாக வந்த யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர் வரத்து குறைந்து வருகிறது. காவிரி ஆற்றில் வினாடிக்கு 15,000 கன அடியாக நீர் வரத்து சரிந்து உள்ளது.
சேலத்தில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் வீட்டின் நிலத்தை அபகரிக்கும் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எங்களுக்கு திமுக நிர்வாகி கொலை மிரட்டல் விடுவதாக அவர் குற்றச்சாட்டினார்.
சேலம் மாவட்டத்தில் முறையான அனுமதியின்றி பட்டாசு கடை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நிரம்பியுள்ள வாணியாறு அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் ஆலாபுரம், பறையப்பட்டி புதூர் ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிக்கைக்காக தயார் செய்யப்படும் இனிப்பு வகைகளில், அதிகமான கலர் பொருட்களை பயன்படுத்த கூடாது என வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்த உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.