கோவை எஸ்டிபிஐ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை ; அதிகாரிகளை கண்டித்து போராட்டம்
கட்சி நிதி வசூல், பணப் பரிமாற்றம் உள்ளிட்ட கணக்கு ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வெளிநாடுகளில் இருந்து நிதி பரிமாற்றம் செய்யப்பட்டதா என்று விவரங்களை அதிகாரிகள் கேட்டு தெரிந்து கொண்டுள்ளனர்.
கோவையில் எஸ்டிபிஐ அலுவலகத்தில், மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டதை கண்டித்து, அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அலுவலகத்திற்கு வந்த மத்திய அமலாக்க துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்துள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்ட மாநகர காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அப்போது அக்கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் முஸ்தபா மற்றும் கட்சி நிர்வாகிகள் அங்கு இருந்தனர்.
கட்சி நிதி வசூல், பணப் பரிமாற்றம் உள்ளிட்ட கணக்கு ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் அங்குள்ள ஒரு கம்ப்யூட்டரில் பதிவாகியுள்ள தகவலையும் ஆய்வு செய்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து நிதி பரிமாற்றம் செய்யப்பட்டதா என்று விவரங்களை அதிகாரிகள் கேட்டு தெரிந்து கொண்டுள்ளனர். பின்னர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் அக்கட்சி நிர்வாகிகளுக்கு சம்மன் அளித்துச் சென்றனர். இந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சோதனை பல மணி நேரம் நீடித்தது. இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது குறித்து தகவல் அறிந்ததும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கட்சி அலுவலகம் முன்பு கூடினர். மேலும் அமலாக்கத் துறை சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக பரபரப்பான சூழல் நிலவியது. இதன் காரணமாக கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாஜகவை விமர்சித்து திமுக போஸ்டர்கள்
கரூரில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கேலி செய்யும் வகையில் போஸ்டர் ஒட்டியதற்கு பதிலடியாக, கோவையில் திமுக பாஜகவை விமர்சித்து போஸ்டர்களை ஒட்டினர். அதில் "திருடர் குல திலகமே ஊழலின் மறு உருவமே அணிலுக்கு அடிச்ச ஜாக்பாட் 5,000 கோடிக்கு அதிபதியாக்கிய BGR ஊழல்" என்ற வாசகத்தை எழுதி தராசு தட்டில் ஒரு பக்கம் பணக்கட்டுகளும் மறுபக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமர்ந்திருப்பது போலும் அமைச்சர் செந்தில் பாலாஜி பணத்தை விட பலமானவர் என்பதை போல் தராசு தட்டு சாய்ந்திருப்பது போன்று சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர்.
இந்நிலையில் கோவை கிழக்கு மாவட்ட திமுகவினர் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பாஜகவை மறைமுகமாக விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களில், "நோட்டா கிட்ட வச்சுக்கோ.... எங்க ஏட்டா கிட்ட வேண்டாம்" என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் கோவை ரயில் நிலையம் கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்