’வன ஆக்கிரமிப்பாளர்களாக பழங்குடிகள்?” - வனத்துறையை கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..!
காடர் பழங்குடிகளின் குடிசைகளை அத்துமீறி அகற்றிய வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி, பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதிக்குள் உள்ள கல்லார்குடி பகுதியில் 23 காடர் பழங்குடியின குடும்பங்கள் வசித்து வந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் மண் சரிவினால் குடியிருப்புகள் பெரும் சேதமடைந்தன. இதையடுத்து காடர் பழங்குடிகள் மண் சரிவு ஏற்படாத இடமாக கருதிய தெப்பக்குளமேடு என்ற வனப்பகுதியில் குடியிருப்புகளை அமைத்தனர். புலிகள் காப்பக உள் வட்ட பகுதி என்பதை காரணம் காட்டி, அப்பகுதியில் குடியிருக்க வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அப்பகுதியில் இருந்த பழங்குடிகளை அப்புறப்படுத்திய வனத்துறையினர், அருகேயுள்ள தேயிலை எஸ்டேட் குடியிருப்பில் தங்க வைத்தனர்.
இதனிடையே தெப்பக்குள மேட்டில் புதிதாக குடியிருப்புகளை ஏற்படுத்த கோரி, பழங்குடிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் பழங்குடிகளின் கோரிக்கையை ஏற்று, தெப்பக்குள மேட்டில் புதிதாக குடியிருப்புகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யப்பட்டது. வருவாய் துறை, வனத்துறை, நில அளவைத் துறை இணைந்து தெப்பக்குளமேடு பகுதியில் புதிய கிராமத்திற்கான நில அளவீடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த மாதம் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தெப்பக்குள மேட்டில் 21 குடும்பங்களுக்கு ஒன்றரை செண்ட் வீதம் நிலத்திற்கான பட்டாக்களை வழங்கினார். 2 ஆண்டு போராட்டம் வெற்றியடைந்ததால் காடர் பழங்குடிகள் அடைந்த மகிழ்ச்சி, வனத்துறையினரின் செயலால் நிலைக்கவில்லை.
தெப்பக்குள மேடு பகுதியில் புதிய கிராமத்தை உருவாக்கும் பணியில் காடர் பழங்குடிகள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மானாம்பள்ளி வனத்துறையினர் பழங்குடிகள் அமைத்திருந்த குடிசைகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடிகள் வனத்துறையினர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட்ட வனத்துறையினர், “கல்லார்குடி மலைவாழ் மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தினை விடுத்து வன நிலங்களை கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வன நிலங்களை சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்வது குற்றம் என பலமுறை அறிவுறுத்தப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்ட போது வனப்பணியாளர்களை தகாத வார்த்தைகளில் பேசி பணி செய்யவிடாமல் தடுத்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குடிசைகளில் ஒரு குடிசையை மட்டுமே வனப்பணியாளர்கள் அகற்றினர்” எனத் தெரிவித்தனர்.
வனத்துறையினரின் இந்த அறிக்கை காடர் பழங்குடிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காடர் பழங்குடிகளின் குடிசைகளை அத்துமீறி அகற்றிய வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி, பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், இடது சாரி கட்சிகள், விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, “வன உரிமை சட்டம் 2006 பழங்குடிகள் வனத்திற்குள் வசிக்கும் உரிமையை வழங்கியுள்ளது. அமைச்சர் பட்டா வழங்கிய இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தில் குடிசை அமைத்து இருந்தாலும், அதனை பிரித்தெறிய வனத்துறையினருக்கு அதிகாரம் கொடுத்தது யார்?. சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்துள்ள ரிசார்டுகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்? எளிய மக்கள் மீது வனத்துறையினர் அதிகாரம் செலுத்தும் அநாகரீகமான நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. பட்டா வழங்கிய இடத்தை வருவாய் துறையினர் உடன் இணைந்து பிரித்து தருவது வனத்துறையினர் வேலை. இதற்கு அரசு துறைகள் முறையான தீர்வு காண வேண்டும்” எனத் தெரிவித்தார்.