பொள்ளாச்சி பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று; பள்ளிகளுக்கு விடுமுறை!
கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்த நாட்களில் 7 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பது பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மற்ற மாவட்டங்களை காட்டிலும், கோவையில் கூடுதலாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் கடந்த ஒரு மாத காலமாக தினசரி கொரோனா பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. சுகாதாரத் துறை சார்பில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொள்ளாச்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டு பேருக்கும், புரவிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருவருக்கும், பனிக்கம்பட்டியில் உள்ள தனியார் பள்ளி மாணவர் ஒருவர் என 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் கிருமி நாசினி தெளித்து, நோய் தொற்று நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சுல்தான்பேட்டை உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நேற்று முன் தினம் 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்கள் 33 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 9 ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 3 மாணவர்களுக்கு ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பள்ளியை 3 நாட்களுக்கு மூட சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்த நாட்களில் 7 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பது பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.