(Source: ECI/ABP News/ABP Majha)
கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீளும் கோவை : நம்பிக்கையளிக்கும் ஜூன் மாத புள்ளிவிவரம்..!
ஜூன் மாதத் துவக்கத்தில் இருந்ததை விட ஜீலை மாதத்தில் தொற்று பாதிப்புகள் பல மடங்கு குறைந்திருப்பது, மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் ஒரே மாதத்தில் 46,515 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 744 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை விட கூடுதல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் மே மாதத்தில் தொடர்ந்து உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்புகளும் உயிரிழப்புகளும், ஜுன் மாதத்தில் இருந்து படிப்படியாக குறைந்து வருகிறது. அதேசமயம் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். ஜூன் மாதத் துவக்கத்தில் இருந்ததை விட ஜீலை மாதத்தில் தொற்று பாதிப்புகள் பல மடங்கு குறைந்துள்ளது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாத ஒப்பீடு
ஜூன் மாதத்தின் முதல் நாள் கோவையில் 3332 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் ஜீலை ஒன்றாம் தேதி 498 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை ஒப்பிடுகையில் ஒரே மாதத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2834 பேருக்கு குறைவாக ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 20 ஆயிரத்து 5 ஆக உயர்ந்துள்ளது. இது ஜீன் ஒன்றாம் தேதி நிலவரப்படி மொத்தம் 1 இலட்சத்து 73 ஆயிரத்து 490 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் 46,515 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 3805 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவே ஜூன் ஒன்றாம் தேதி 30,114 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். எனவே ஒரே மாதத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 26,309 பேர் வரை குறைந்துள்ளது.
ஜுலை ஒன்றாம் தேதி கொரோனா தொற்றில் இருந்து 922 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஜுலை ஒன்றாம் தேதி 1936 பேர் குணமடைத்துள்ளனர். தற்போது குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 14 ஆயிரத்து 149 பேராக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 74,866 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஜூன் ஒன்றாம் தேதி 32 ஆக இருந்த உயிரிழப்புகள், ஜுலை ஒன்றாம் தேதி 10 ஆக குறைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2051-ஆக உயர்ந்துள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி 1307-ஆக மொத்த உயிரிழப்புகள் இருந்தன. கடந்த ஒரு மாதத்தில் 744 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்புகள் பல மடங்கு குறைந்து கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து கோவை மெல்ல மெல்ல மீண்டு வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.