கோவையில் பேருந்தை சிறை பிடித்து மக்கள் போராட்டம் ; உரிய நேரத்திற்கு பேருந்துகளை இயக்க கோரிக்கை
நல்லூர் பாளையம் கிராமத்தில் குறித்த நேரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்து பேருந்துகளை சிறை பிடித்து மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நல்லூர் பாளையம் கிராமத்தில் குறித்த நேரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்து பேருந்துகளை சிறை பிடித்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நல்லூர் பாளையம் கிராமத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். வழித்தடம் எண் ஆறு மற்றும் வழித்தடம் எண் 105 ஆகிய இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டு பேருந்துகளும் குறித்த நேரத்துக்கு இயக்கப்படாமல் பொதுமக்களும் மாணவ, மாணவிகளும் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
இதனைக் கண்டித்து இன்று திடீரென நல்லூர் பாளையம் பகுதியில் பேருந்துகளை சிறை பிடித்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளிக்கு செல்வதற்கு எட்டு மணிக்கு வர- வேண்டிய பேருந்து ஒரு மணி நேரம் தாமதமாகவும், மாலையில் 4:00 மணிக்கு வரவேண்டிய பேருந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக தாமதமாக வருவதாகவும், சில சமயங்களில் பேருந்துகள் வருவதில்லை எனவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் உரிய நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமெனவும், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த சூலூர் கோட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். சூலூர் கிளை போக்குவரத்து துறை மேலாளர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடத்தி வந்த சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்